தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் குழந்தைகளின் உடல் நலனை மனதில் கொண்டு நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற "இல்லம் தேடிக் கல்வி" பயிற்சிப் பணிமனை, விழிப்புணர்வு கலைப் பயணம் மற்றும் தன்னார்வலர்களுக்கான, இணையதளம் தொடக்க விழாவினை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியதாவது, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் தன்னார்வளர்களை இணைப்பதற்கான இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஆர்வமாக பலர் பதிவு செய்ய முன்வர வேண்டும் எனவும், இந்த திட்டத்தை நாம் அனைவரும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி மையங்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும், மாணவர்களுக்கு ஒரு தன்னார்வளர் என்கிற வீதம் இந்த திட்டமானது நடைமுறையில் இருக்கும்,தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும். திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், திண்டுக்கல் போன்ற 12 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த கற்றல் வழி வகுப்புளை எல்லாம் அந்த அந்த பள்ளி நிர்வாகமே கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், மேலும் கற்றல் இடைவெளியை இந்த திட்டம் குறைக்கும் ஓவ்வொரு தன்னார்வளர்களுக்கும் மாதம் ரூபாய் 1000 ஊக்க தொகை வழங்க ஆலோசித்து வருகிறோம். இத்திட்டத்தில் கதை சொல்வது, பாடல் பாடுவது போன்ற செயல்பாடுகளும் இடம் பெறும். தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பின்னர் கல்வி இடைநிற்றலில் 1 லட்சம் மேல் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் உள்ளனர். தற்போது வரை 1 முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது மட்டுமே முடிவு செய்துள்ளோம் நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை.
வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்த பின்னர் தான் நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளி கல்வித்துறை சார்பில் வகுப்புகள் வாரியாக கையேடு தயார் செய்து தன்னார்வலர்களுக்கு கொடுக்கப்பட்டு வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்