தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் ராமராஜன். 80 களிலும் 90 களின் ஆரம்பத்திலும் ரஜினி, கமலுக்கு இணையாக இவரது படங்களும் வசூல் வேட்டை நடத்தியது. கிராமத்து கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் ராமராஜனுக்கு பட்டி தொட்டியெங்கும் ஏராளமான ரசிகர்கள்.ஆரம்பத்தில் இவரின் கால்ஷீட்டிற்காக பல இயக்குநர்கள் சைக்கிளில் படையெடுத்து பின்னர் கோடீஸ்வரர்களாகவே ஆனார்கள் என்றும் சில சுவாரஸ்ய செய்திகள் உலாவிக்கொண்டிருக்கிறது.குறிப்பாக இன்றளவும் கொண்டாடக்கூடிய் கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியான சமையத்தில் 100 நாட்களை கடந்து பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை குவித்துள்ளது.அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ராமராஜனுக்கு இறுதியாக  நடித்த படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதன் காரணமாக சினிமாவில் இருந்து விலகி , மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவுடன் தீவிர அரசியலில் இறங்கினார். ராமராஜன் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் அரசியலில் இருந்தும் விலகி தற்போது மீண்டும் படங்களை நடிக்க தொடங்கியுள்ளார்.




இந்நிலையில் ராமராஜனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் சமீப நாட்களாகவே தீவிரமாக இணையத்தில் பரவ தொடங்கிவிட்டது. முன்னதாக சாதாரண கொரோனா அறிகுறிகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமராஜனை குறித்தும் வதந்திகள் பரப்பப்பட்டது . தற்போது பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ள ராமராஜன் தரப்பு, ““ராமராஜனைப் பற்றி தற்சமயம் தவறான வதந்தியை பரப்பி வருகின்றார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். 2 படங்களுக்கு தனது கதையைத் தந்துள்ள ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்காகவும் தன்னை தயார்படுத்தி வருகிறார். நடிகர் ராமராஜன் உடல் நலத்துடனும், மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர், தான் நடிக்கும் படத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்வார்” என ராமராஜனின் பி.ஆர்.ஓ விஜய முரளி தெரிவித்துள்ளார் ராமராஜன் அடுத்தடுத்து 6 படங்களில் நடிப்பார் என கூறப்படுகிறது. இதுவரையில் 44 படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டார் ராமராஜன், இந்நிலையில் இன்னும் 6 படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டால் , 50 படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்குமாம். அதன் காரணமாகத்தான் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பதற்கு இவரை அனுகினாலும் மறுத்து விடுகிறாராம் ராமராஜன்.




சமீப காலமாகவே திரைத்துறையிலிருந்து விலகியிருக்கும் நடிகர்களின் உடல்நிலை குறித்தான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. முன்னதாக நடிகர் செந்தில், நடிகர் கவுண்டமணி உள்ளிட்ட நடிகர்களில் உடல்நிலை குறித்தும் இது போன்ற வதந்திகளை சிலர் பரப்பி வந்தனர். மறந்து போன நடிகர்களை நினைவு கூற , பல வழிகள் இருக்கும் நிலையில் அவர்கள் குறித்தான தவறான வதந்திகளை பரப்புவது சற்றி வேதனையளிக்கும் விஷயம்தான் .