வெயில் சுட்டெரிப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாகத் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி இன்று (மே 26) அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவ்வாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


தமிழ்நாட்டில் கோடை  வெயில் சதமடித்து வருகிறது. மாணவர்களுக்கு ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதியாக இருந்த பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு இருக்கும் என்று சமீபத்தில் அமைச்சர் தெரிவித்திருந்தார். 


6 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதியும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஜுன் மாதம் 5ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.


கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படும் தேதியை மாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் பலரும் இதே கோரிக்கையை முன் வைத்திருந்தனர்.


முதல்வரிடம் ஆலோசனை


இந்த நிலையில், வெயில் சுட்டெரிப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 




திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:


’’பள்ளிகள் திறப்பு குறித்த தலைமைச்செயலாளர் மற்றும் முதன்மைச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பள்ளிகள் திறப்பதற்கான ஆணைகள் தயாராகி வருகின்றன. வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் உள்ள முதலமைச்சர் இதுகுறித்துக் காலையிலேயே தொலைபேசியில் பேசியுள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறக்க முதமைச்சரிடம் 2 தேதிகள் கொடுக்கப்பட்டன.


வெயில் கொடுமை காரணமாக ஒவ்வொரு தரப்பினரும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இதையடுத்து கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதுகுறித்த பள்ளிக் கல்வித்துறை சார்பிலான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


கல்வியாண்டு விவரங்கள்


2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.