தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் அங்கு திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வருகிறார். இவர் மீது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபகாலமாக அதிகமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கரூர்  ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு அமைந்துள்ளது. இங்கு சோதனை நடைபெற்று வருகிறது.  இதன் காரணமாக அப்பகுதியில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் இப்பகுதிக்கு கரூர் மாநகராட்சி மேயர்  கவிதா கணேசன் உட்பட திமுக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர்.


மேலும் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வரும் நிலையில் இன்று மேயர் கவிதா கணேசன் தலைமையில் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மாமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக நலன் கருதி வருகின்ற 29.05.2023 ஆம் தேதி அன்று இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தொண்டர்களும் அப்பகுதியில் அளவுக்கு அதிகமாக குவிந்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஆளும் கட்சி அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் இந்த சோதனையானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.