தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் 


முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில்  சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணையை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் விஷச்சாராய அருந்தியதால் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.


இந்த விவகாரத்தில் தற்போதைய ஆளும் திமுக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, தீர்வு காண வேண்டும் என  பாஜகவினர் மனு அளித்தனர்.


வருமான வரித்துறையினர் சோதனை 


இப்படியான சூழலில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சி அமைச்சர் ஒருவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மேலே குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 


இதேபோல் கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் அமைந்துள்ள  செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளரான இவர் சமீபத்தில் தான் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.