கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் முறையாக இயங்கவில்லை. தமிழகத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் கடந்தாண்டு டிசம்பர் இறுதி முதல்தான் படிப்படியாக செயல்படத் தொடங்கியது. ஆனால், அதற்குள் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வந்த காரணத்தால் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது.
இதனால், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, மத்திய கல்வி அமைச்சகத்தினருடன் கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் கட்டாயம் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றார்.
மேலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கண்டிப்பாக இணையவழியில் நடத்தப்படாது என்றும், நேரடித் தேர்வாகதான் என்றும் உறுதியாக கூறினார். திருச்சியில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
“ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், கல்வியாண்டு முடிந்துவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்கப்படுகிறது. கொரோனா நோய் நம் அனைவருக்கும் புதியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசின் அனைத்து துறையினருக்குமே நடைமுறை சிக்கல் உள்ளது.
மேலும் படிக்க : கன்னியாகுமரிக்கு அருகே கடலுக்குள் நகரம் கட்டும் சீனா : கேள்விக்குறியாகும் இந்தியாவின் பாதுகாப்பு!
கொரோனா காலமாக இருப்பதால் நாம் குறிப்பிட்ட காலம் பொறுமையாக இருக்க வேண்டி உள்ளது. கொரோனா தொற்று பரவல் எவ்வளவு விரைவாக குறைகிறதோ, அதற்கேற்ப விரைவாக பிளஸ் 2 தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில், மாணவர்களின் எதிர்காலம் எப்படி முக்கியமோ அதே அளவுக்கு அவர்களது உடல்நலனும், உயிரும் முக்கியம் என்று கருதுகிறோம்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது எழுந்துள்ள பாலியல் புகார்கள் தொடர்பான விவகாரத்தில் குழுவின் அறிக்கை வந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளை அனைவரும் பார்ப்பீர்கள்.”இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் பாதிப்பு தினசரி 27 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. முழு ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், இந்த மாத இறுதிக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துவிடுவது சுலபம். ஆனால், அவர்கள் உயர்கல்வியில் சேரும்போது பல்கலைகழகங்களும், நீதிமன்றங்களும் அவர்களது தேர்ச்சி செல்லாது என்று கூறினால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். இதன்காரணமாகவே, 12ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.