பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் ’பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’ என அழைக்கப்படும் என்றும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்துத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:
''தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கெனெ ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
1400 கோடி நிதி ஒதுக்கீடு:
அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முதலமைச்சர் நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும் மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக சுமார் 1400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இத்துடன், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ (D.P.I.) வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திரு உருவச் சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்றும் அழைக்கப்படும்.
மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும்''.
இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இலவச காலை உணவு, நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு முன்னுதாரணத் திட்டங்களை, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளில் தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம்..விண்ணப்பிக்கும் முறை, தேர்வுசெய்யும் முறை இதுதான் - https://tamil.abplive.com/news/chennai/sports-development-authority-of-tamilnadu-goverment-special-scholarship-cheme-for-sportspersons-87591/amp