தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என செய்திகள் வருகின்றன. ஒரு பக்கம் மக்கள் உயிரினை கையில் பிடித்துக்கொண்டு அல்லாடினாலும் மறுபுறம் தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டினை துவங்க ஆயுத்தமாகிவிட்டார்கள். இப்போது நிறைய தெளிவின்மைகள் இருக்கின்றன. அதனை உடனடியாக பள்ளி கல்வித்துறை கவனிக்க வேண்டும்.


1. கடந்த கல்வி ஆண்டில் (20-21) 1-9 ஆம் வகுப்பு படித்த (கல்வித்தொலைக்காட்சி மூலம்) மாணவர்கள் நிலை என்ன? தேர்ச்சி பெறுகின்றார்களா இல்லை அல்லது என்ன நிலை? (ஏனெனில் ஏற்கனவே தனியார் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டினை துவங்கிவிட்டனர்/ துவங்க திட்டமிடுகின்றனர்)


2. ஆன்லைன் வகுப்புகள் நடத்த வழிமுறைகளையும் வழிகாட்டுதலையும் அரசு புதிதாக வழங்க வேண்டும். 
  அ) பள்ளிக்கட்டணம் செலுத்த வேண்டுமா, காலக்கெடு, கட்டாயப்படுத்துதல் கூடாது உட்பட
  ஆ) எத்தனை மணி நேரம் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும்
  இ) என்ன மாதிரியான வீட்டுப்பாடங்களை கொடுக்கவேண்டும்
  ஈ) புத்தகங்களை எவ்வாறு வழங்கவேண்டும்


3. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி வழியே பாடம் நடத்தப்படபோகின்றார்களா? கடந்த ஆண்டு என்ன கற்றார்கள் என எவ்வாறு மதிப்பிடுவது உட்பட மாற்றுகளை உடனடியாக ஆராய வேண்டும்.


4. ஊரடங்கு முடிந்து குறைந்தது இரண்டு வாரங்கள் கழித்தே ஆன்லைன் வகுப்புகளும் துவங்க வேண்டும். ஏனெனில் பெருவாரியானவர்கள் தங்கள் வசிப்பிடங்கள் இருந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். Base Locationகளுக்கு திரும்ப நேரம் கொடுக்க வேண்டும்.


5. தனியார் பள்ளிகளில் பணிபுரிவோரின் குறைந்தபட்ச ஊதியம், வேலை செய்யும் நேரம், பணி பாதுகாப்பு, அரசின் உதவிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றையும் உறுபடுத்தவேண்டும்.


இந்த பெரும்தொற்று நேரத்தில் அரசின் முழு கவனமும் பாதிக்கப்பட்டோரை மீட்கவும், இன்னபிற ஏற்பாடுகளை செய்வதில்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த அலை ஓய்ந்தபின்னர், கராரான வழிமுறைகளை வழங்கியபின்னரே ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் துவங்கவேண்டும் / பள்ளிக்கட்டணம் வசூலிக்கவேண்டும் என்ற  கட்டளைகளையாவது பிறப்பிக்கவேண்டும் என செயற்பாட்டாளர் உமாநாத் செல்வன் (எ) விழியன் தெரிவித்துள்ளார்.