தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை காரணமாகக் கடந்த கல்வியாண்டில் மட்டும் சுமார் 53 லட்சம் மாணவர்கள் அங்கிருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்ததாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒன்று முதல் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களில் சுமார் 53 லட்சம் பேர் சேர்ந்ததாக பள்ளிக்கல்வித்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இதில் முதலாம் வகுப்பில் மட்டும் சுமார் 3 லட்சத்து 93 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 94580 பேர் அதிகம். 


கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் பலர் வேலைவாய்ப்பு இழந்திருந்த நிலையில் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தைக் குறைக்காமல் பெற்றோர்கள் கட்டணம் செலுத்தவேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பள்ளிகள் தவணை முறையில் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தும் தனியார்  பள்ளிகள் எவ்வித விதிகளையும் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தங்களது பிள்ளைகளுக்கு அதிக கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர்கள் அவர்களை தனியார் பள்ளியிலிருந்து விலக்கி அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். அதன்படி சுமார் 53 லட்சம் மாணவர்கள் 2020-21 கல்வியாண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 




முன்னதாக, வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீறி பள்ளிகளைத் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.


இதனைப் பரிசீலித்த தமிழக அரசு கடந்த டிசம்பர் 25 ஆம் தொடங்கி வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. இதனை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். அதேவேளையில், தமிழகத்தில் 10 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த கல்வியாண்டில் கட்டாயம் நடக்கும் என்றும் தெரிவித்தார். மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்திய அவர், ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்தார்


இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில் சில தனியார் மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி நிர்பந்திப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. புகாரை அடுத்து மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. நடவடிக்கையின்படி ஓமைக்ரான் காலத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரிக்கை விடுத்துள்ளது.