தஞ்சாவூர்: டிட்டோஜாக் வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தலைமை ஆசிரியை மாணவ, மாணவிகளை வெளியேற்றி பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தம்
தொடக்கக் கல்வித் துறை கட்டமைப்பை அடியோடு சீரழிப்பதாகவுள்ள, பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பறிக்கக்கூடியதாகவுள்ள மாநில முன்னுரிமையைக் கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243}ஐ ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை சரி செய்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை 2006, ஜனவரி 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
55 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை
இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளிகளில் ஏறத்தாழ 55 சதவீத ஆசிரியர்கள் இன்று பணிக்கு வரவில்லை. அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்ட நிலையில், பல ஆசிரியர்கள் வராததால், மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆளில்லாத நிலை நிலவியது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்துாரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 127 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு சார்பில் நான்கு ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இரு ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளி வகுப்பறையை இழுத்து பூட்டிய தலைமை ஆசிரியை
இந்நிலையில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகளும் ஈடுபட்டனர். இதற்கிடையில், பூவத்துாரில் காலை வழக்கம் போல மாணவ, மாணவிகளும், தற்காலிக ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்தனர். வகுப்பறை திறந்து இருந்த நிலையில், மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த பள்ளி தலைமையாசிரியை கண்ணகி, மாணவர்களை வெளியேற்றி விட்டு வகுப்பறையை பூட்டி விட்டு சென்றதால் வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில் அமர்ந்து இருந்தனர். வெகுநேரமாக மாணவ, மாணவிகள் வராண்டாவில் அமர்ந்து இருப்பது குறித்து பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருக்கு தகவல் கிடைத்தது.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. 2026ல் அதிமுக ஆட்சி அமைக்கும்: எம்எல்ஏ வைத்திலிங்கம் சூளுரை
கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
இதையடுத்து அங்கு வந்த பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின்படி பள்ளி வகுப்பறையின் பூட்டுகள் திறக்கப்பட்டு, இரண்டு மணி நேரமாக வெளியில் காத்திருந்த மாணவ, மாணவிகளை வகுப்பறைக்கு உள்ளே சென்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வகுப்புகளை துவங்கினர். பின்னர் மாணவ, மாணவிகள் தங்களின் பாடங்களை படித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெற்றோர்கள் வேதனை
இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், ஆசிரிய, ஆசிரியைகள் போராட்டம் நடத்தினால் பள்ளி விடுமுறை என்று எங்களிடமாவது தெரிவித்து இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி இருக்கமாட்டோம். ஆனால் வகுப்பறைகளை பூட்டி விட்டு சென்றது கண்டனத்திற்கு உரியது. வெகு நேரம் வரை குழந்தைகள் வராண்டாவிலேயே உட்கார்ந்து இருப்பது தெரிய வந்து பள்ளிக்கு சென்றோம். பின்னர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வகுப்பறை திறக்கப்பட்டது. இதுபோன்று இனியும் நடக்காதவாறு கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.