Devara Trailer: டோலிவுட் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவாரா'. இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் பாலிவுட் முன்னணி நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர். கொரட்டாலா சிவா இயக்கத்தில் யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீ காந்த், கலையரசன் உள்ளிட்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜான்வி கபூர் மட்டுமல்ல பாலிவுட் நடிகர் சைப் அலி கானும் இப்படத்தின் மூலம் டோலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள 'தேவாரா' படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் பாண் இந்தியன் படமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 



 


மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் என்பதை இதை தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள தேர்ந்தேடுக்கப்பட்ட திரையரங்குகளில் டிரைலரை வெளியிடலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் அது சில காரணங்களால் நடக்க முடியாமல் போனதால் 'தேவாரா' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடத்த படக்குழு திட்டமிட்டது. பான் இந்திய படமாக வெளியாக இருக்கும் இப்படத்திற்காக ஏற்கனவே படக்குழுவினர் புரொமோஷனுக்காக மும்பைக்கு வருகை தந்துள்ளனர். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. 



ஆர்.ஆர்.ஆர். படத்தின் சர்வதேச அளவிலான வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'தேவாரா' என்பதால் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 




விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'தேவாரா' படத்தின் டிரைலர் வெளியீட்டு அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் 10ம் தேதியான இன்று டிரைலர் வெளியாகியுள்ளது. பயம் என்றாலே என்ன என தெரியாத ஒரு கூட்டத்துக்கு பயம் என்றால் என்பதை காட்டி அவர்களின் கண்களில் பயத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் தேவாரா. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஜூனியர் என்டிஆரின் அதிரடியான தேவாரா படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.