சென்னையில் பொது இடங்களில் புகைப்பதால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்திருக்கும் நிலையில், புகைத்தடை சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளர். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:


''சென்னையில் பள்ளிகளை சுற்றியுள்ள  பொது இடங்களில் புகை பிடிப்பது அதிகரித்திருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசித்து பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் தனியார் செய்தி நாளிதழ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெரும் கவலையளிக்கிறது!


சென்னையில் 20 இடங்களில் கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் பள்ளிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் குறைந்தது 3 இடங்களிலாவது பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் பாமகவின் நீண்டகால குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது!






பள்ளிக் குழந்தைகள் மலர்களை விட மென்மையானவர்கள். பிறர் புகைத்து விடும் புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகை புற்றுநோய்கள் ஏற்படுகின்றன!


ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடாது. அதற்காகத் தான்  நான்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, பல்வேறு தடைகளைத் தகர்த்து பொது இடங்களில் புகைக்கத் தடை விதிக்கும் சட்டத்தை  நிறைவேற்றினேன்!






புகைத் தடை சட்டம் முறையாக செயல்படுத்தப் படாததுதான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். காந்தியடிகளின் பிறந்த நாளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அந்த சட்டத்தை, அவரது நினைவு நாளான இன்றில் இருந்தாவது  கடுமையாக செயல்படுத்த வேண்டும்; குழந்தைகளைக் காக்க வேண்டும்.''


இவ்வாறு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதையும் வாசிக்கலாம்:
10 11 12th Exam Result: 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது? - தேதியை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி


இதையும் வாசிக்கலாம்: 10, 11, 12th Practical Exam: 10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு தேதிகளில் மாற்றம்: எந்தெந்த தேதி தெரியுமா? முழு விவரம்! https://tamil.abplive.com/education/10th-11th-12th-practical-exam-dates-changed-directorate-of-government-examinations-98955/amp