கல்வி உதவித் தொகை குறித்து வரும் செல்போன் அழைப்புகள் மோசடி ஆனவை என்றும் அவற்றை மாணவர்கள் நம்ப வேண்டாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு சார்பில், புதுமைப் பெண் திட்டம், சாதி வாரியான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை, பிரகதி உதவித் தொகை, சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. 


கல்வி உதவித்தொகை பெயரில் பண மோசடி


இந்த நிலையில் அண்மைக் காலங்களில் மர்ம நபர்கள் சிலர் பள்ளி மாணவர்களை செல்போன் வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். கல்வி உதவித்தொகை குறித்து பேசுவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வாட்ஸப் மூலம் க்யூ ஆர் குறியீட்டை அனுப்பி, பணம் பறிக்கின்றனர். இதுதொடர்பாக மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் புகார் அளித்தனர்.


பள்ளிக் கல்வித் துறைக்கு புகார்கள் வரப்பெற்ற நிலையில், கல்வி உதவித்தொகை சார்ந்த செல்போன் அழைப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


அலைபேசிகளுக்குத் தொடர்பு கொள்ளமாட்டார்கள்


இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மற்றும் சைபர் கிரைம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பெற்றோர் மற்றும் மாணவ மாணவியர் கவனத்துக்கு, மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்த ஒரு அதிகாரிகளும் மாணவர்கள், பெற்றோரின் அலைபேசிகளுக்குத் தொடர்பு கொள்ளமாட்டார்கள்.


ஆனால் சைபர் குற்றவாளிகள் சிலர், கரூர் மாவட்டத்தில் பல மாணவ, மாணவிகளிடம் கல்வித் துறை அதிகாரிகள் என்று கூறி வாட்ஸ் அப் செயலி மூலம் க்யூஆர் குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்யவைத்து பணம் பறித்துள்ளனர். எனவே யாரும் இதுபோன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.