சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் அரசியல் சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள முற்றிலும் தடை விதிக்கப்பட்டதற்கு, பல்வேறு மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் அதற்குக் கீழ் இயங்கும் இணைவு பெற்ற கல்லூரிகளுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சார்பில் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.
அதில், ’’பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளைப் பல்கலைக்கழகம், கல்லூரி வளாகத்தில் மேற்கொள்வதை முற்றிலும் தடை செய்யவேண்டும்.
மேலும், இதுதொடர்பாக மாணவர்களுக்குத் தகுந்த அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கி, கல்வி பயில்வதில் மட்டுமே மாணவர்கள் முழு கவனம் செலுத்த வழிவகுக்க வேண்டும். கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த விதமான அம்சமும் வளாகத்தில் இல்லை என்பதையும், பாதுகாப்பான சூழலில்தான் மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர் என்பதையும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உறுதி செய்ய வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கம், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), பொதுப்பள்ளிக்கான மாநில மேடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், அரசியல் சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை விதிக்கப்படுவது குறித்து வெளியான சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர், பெரியார் பல்கலைக்கழகத் துறைத் தலைவர்கள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், அனைத்துக் கல்லூரிகளுக்கு அரசியல் பரப்புரை குறித்து வெளியான கடிதம் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களின் குறைகளையும், கருத்துகளையும் ஊடகங்களிடம் தெரிவிக்கக்கூடாது; ஏதேனும் அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் அதை பதிவாளரிடம் காட்டி ஒப்புதல் பெற்றுத்தான் வெளியிட வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்