கெளரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும்  என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்த அவர் தெரிவித்ததாவது:” 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் தரத்தை உலக அளவில் உயர்த்துவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதிவாளர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் உடனான  கூட்டம் நடைபெற்றது.


துணைவேந்தர்கள் கூட்டம் நிறைவு பெற்றபின் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:


”கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள், கட்டுரை போட்டிகள், வினாடி வினா போட்டிகள், கவிதை போட்டிகள் போன்றவை கல்லூரி அளவில் நடைபெற உள்ளது. கல்லூரியில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக அளவிலும் மாநில அளவிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.


புதிதாக தொடங்கப்பட்ட  பாடத்திட்டங்கள்


முதல் துணை வேந்தர் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அனைத்து  பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிற பாடங்களில் 75 சதவீத பாடத்திட்டங்களை ஒரே மாதிரியாக கடைபிடிக்க வேண்டும். 25% பாட திட்டங்களை மட்டும் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். ஒரு சில பல்கலைக்கழகங்களில் புதிதாக தொடங்கப்பட்ட  பாடத்திட்டங்கள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.


2023-2024ம் கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பாடக்குழுவின் ஒப்புதலோடு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான படத்திற்கு துணைவேந்தர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.


ரூ.5,000 ஊதியம் உயர்வு 


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் படத்திட்டங்கள் மாணவர்கள் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தரவரிசை வழங்கும் நடைமுறையை பின்பற்ற உள்ளோம்.கௌரவ விரிவுரை யாளர்களுக்கு 5000  ரூபாய் ஊதியம் உயர்த்தி 25,000 ரூபாயாக வழங்கப்பட உள்ளது. தமிழக கல்வி கொள்கை குழுவிடம் தங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான தகுதியை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் துணைவேந்தர் அரசு சார்பில் ஒருவர் சிண்டிகேட் உறுப்பினர் மற்றும் மூத்த பேராசிரியர் கொண்ட குழுவைக் கொண்டு அவர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.


ஒரே மாதிரியான தேர்வு முறை அறிமுகம்


அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் ஒரே மாதிரியான தேர்வுமுறை,தேர்வு கட்டணம் அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரே காலகட்டத்தில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மாநில தகுதி தேர்வு(SLET)நடைபெறும். அமலாக்கத்துறை சோதனை குறித்து சட்டப்படி சந்திப்போம்”. இவ்வாறு பொன்முடி தெரிவித்தார்.