Rahul Gandhi Case: மோடி குடும்பபெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டதது. இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு இன்று அதாவது ஜூலை 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையில், அவதூறு வழக்கு தொடர்ந்தவர் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 


மோடியின் குடும்பப்பெயர்' குறித்து சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீது புகார்தாரரும் குஜராத் பாஜக எம்எல்ஏவுமான பூர்ணேஷ் மோடிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது மற்றும் ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.


கேவியட் மனு:


 ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது தனது கருத்தையும் கேட்க வேண்டும் என புர்னேஷ் மோடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற முடியும் என்பதால், உச்சநீதிமன்றம் வழங்க உள்ள தீர்ப்பு தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


வழக்கு கடந்து வந்த பாதை:


கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது மோடி எனும் சமூகப் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில்,  ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி இழிவுபடுத்தியுள்ளதாக என்று குற்றம் சாட்டினார். 


2 ஆண்டுகள் சிறை தண்டனை:


வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், அவருக்கு அன்றே ஜாமீன் வழங்கப்பட்டது, இதனால் அவர் 30 நாட்களுக்குள் தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.


அவரது தண்டனைக்கு ஆட்சேபம் தெரிவித்த ராகுல் காந்தி, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகி, தனது தண்டனைக்கு தடை விதிக்கக் கோரினார். இது ஏப்ரல் 20 அன்று நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து,   தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றமும் கடந்த 7ம் தேதி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.