அநீதிக்கு எதிராக போராடிய மாணவிகளை பழிவாங்குவதா என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பெரியார் பல்கலை. துணைவேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:
’’பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பழி வாங்கும் போக்கை எதிர்த்து போராடிய 5 மாணவிகள் மீது நிர்வாகம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அவர்களின் நடத்தைச் சான்றிதழில் ‘Not Satisfactory’ என்று குறிப்பிட்டு அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கத் துடிக்கிறது!
பழி வாங்கப்படும் மாணவிகள் செய்த ஒரே தவறு, உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் மீது பல்கலைக்கழக நிர்வாகம் சுமத்திய பாலியல் புகார் பொய்யானது; பழி வாங்கும் செயல் என்று மாவட்ட ஆட்சியரிடமும், ஊடகங்களிடமும் அம்பலப்படுத்தியதும், நீதி கேட்டுப் போராடியதும்தான்!
பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது நூற்றுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசே அவரது நிர்வாகத்திற்கு எதிராக விசாரணை நடத்த ஆணையிட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் துணைவேந்தரின் பழிவாங்கும் செயல்கள் தடையின்றி தொடருவதை அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.’’
பாதிக்கப்பட்ட மாணவிகளின் நன்னடத்தை சான்றிதழைத் திரும்பப் பெற்று புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். பல்கலை.யை சீரழிக்கும் துணைவேந்தர் மற்றும் அவரது குழுவினரை பணி நீக்கம் செய்து, அவர்கள் மீதான புகார்கள் குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
விசாரணைக் குழு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறுவதாக வரபெற்ற புகார்கள் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக் குழு அமைத்தது. இக்குழு விசாரணை அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் தெரிவிக்கப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறுவதாக பல புகார்கள் அரசிடம் பெறப்பட்டன.
குறிப்பாக, உடற்கல்வி இயக்குநர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது, பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகள் (தமிழ்நாடு அரசின் 200 புள்ளிகள்) இடஒதுக்கீடு ஆணையின்படி நிரப்பப்படாதது, தமிழ்த்துறை தலைவர் பெரியசாமி என்பவரின் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளான போலி சான்று, தகுதியின்மை ஆகியவை குறித்து விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில், இவரை விட பலர் பணியில் சீனியராக இருக்கும் நிலையில் பணியில் இளையவரான இவரை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்ய பரிந்துரை செய்து, விதிகளுக்கு புறம்பாக நியமித்தது என்பன உள்ளிட்ட புகார்கள் இதில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: Periyar University: பெரியார் பல்கலை.யில் முறைகேடுகள், ஊழல்: பட்டியலிட்டு விசாரணைக் குழு அமைத்த அரசு - பகீர் விவரம்