டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆக கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு செயலாளரும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான அஜய் யாதவ் ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.
முன்னதாக உமா மகேஸ்வரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆக இருந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.
யார் இந்த கோபால சுந்தர ராஜ்?
கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ், வணிக வரித்துறை இணை இயக்குநர், தென்காசி ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், கீழக்கரை அருகே மாவிலை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால சுந்தர ராஜ். தமிழ் வழியில் கல்வியை முடித்தவர். ராஜஸ்தானில் விஞ்ஞானியாகப் பணியாற்றிய அவர், குடிமைப் பணியின் மீது ஆர்வம் கொண்டு, பணியைத் துறந்தார்.
தன்னுடைய மூன்றாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 5ஆம் இடத்தைப் பிடித்து ஐஏஎஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் எப்போது?
இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி தலைவர், போதிய உறுப்பினர்கள் இதுவரை நியமிக்கப்படாததால், ஆணையத்தின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. குரூப் 4 தேர்வு அறிவிப்பு, குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் ஆகியவை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது நினைவுகூரத் தக்கது.