ஏழை, எளிய மாணவர்களின்‌ கல்விக் கனவை திறனற்ற திமுக அரசு முடக்க நினைப்பதாகவும் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனவும் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர்‌ அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


’’2030 ஆம்‌ ஆண்டிற்குள்‌, நாட்டில்‌ உள்ள அத்தனை குழந்தைகளுக்கும்‌ ஒரே மாதிரியான, தரமான கல்வி கிடைக்க வேண்டும்‌ என்ற நோக்கத்தில்‌, பிரதமர்‌ நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு சிறப்பான திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகிறது. அதன்‌ ஒரு பகுதியாக, பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய குழந்தைகளும்‌ சிறப்பான கல்வி பெற வேண்டும்‌ என்ற நோக்கத்தில்‌ அனைவருக்கும்‌ கல்வி உரிமை திட்டம்‌ செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ மூலம்‌, தனியார்‌ பள்ளிகளில்‌ 25 சதவீத இடங்கள்‌, ஏழை எளிய மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கல்விச்‌ செலவை மத்திய அரசே ஏற்றுக்‌ கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும்‌, மாநில அரசுகளுக்கு, இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.


தமிழகத்தைப்‌ பொறுத்தவரை, இந்தத்‌ திட்டத்திற்கு, 2021-2022 ஆம்‌ ஆண்டில்‌ 1598 கோடி ரூபாயும்‌, 2022-2023 ஆண்டுக்கு, கடந்த டிசம்பர்‌ மாதம்‌ வரையில்‌, 1421 கோடி ரூபாயும்‌ மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிலையில்‌, இரண்டு ஆண்டுகளாக, தமிழக பள்ளிகளுக்கு மழலையர்‌ வகுப்பிற்கான நிதி வழங்கப்படவில்லை என்று, தனியார்‌ பள்ளி சங்கங்களின்‌ கூட்டமைப்பு குற்றம்‌ சாட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கான கல்விக்‌ கட்டணத்தை தமிழக அரசு வழங்காவிட்டால்‌, வரும்‌ ஆண்டிற்கான மாணவர்‌ சேர்க்கை பாதிக்கப்படும்‌ வாய்ப்பு உள்ளதாக வருத்தம்‌ தெரிவித்திருக்கின்றன தனியார்‌ பள்ளி சங்கங்கள்‌. 


இந்தத்‌ திட்டத்திற்காக இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கிய நிதி சுமார்‌ 3000 கோடி என்ன ஆனது என்பதை, தமிழக பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்‌. ஏழை எளிய மாணவர்களுக்குக்‌ கிடைக்கும்‌ கல்வி வாய்ப்புகளில்‌, தங்களது மெத்தனத்தை அமைச்சர்‌ காட்டக்‌ கூடாது. உடனடியாக, கல்விக்‌ கட்டண நிலுவைத்‌ தொகையை, பள்ளிகளுக்கு வழங்கி, நடப்பு ஆண்டு மாணவர்‌ சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்‌ என்று வலியுறுத்துகிறேன்‌.




மேலும்‌, தமிழகம்‌ முழுவதும்‌ பாழடைந்து கிடக்கும்‌ பத்தாயிரத்துக்கும்‌ அதிகமான அரசுப்‌ பள்ளிக்‌ கட்டிடங்களை சீரமைக்கப்‌ போவதாக, கடந்த ஆண்டு பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ அறிவித்திருந்தார்‌. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம்‌ ஆகப்‌ போகிறது. அந்தப்‌ பள்ளி கட்டிடங்களின்‌ தற்போதைய நிலை என்ன என்பதை அமைச்சர்‌ கூற வேண்டும்‌. அது மட்டுமல்லாது, தமிழகத்தை விளையாட்டின்‌ தலைநகராக மாற்றுவோம்‌ என்று அமைச்சர்‌ பதவியேற்றபோது உறுதியளித்த விளையாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி, பல அரசுப்‌ பள்ளிகளில்‌, தரமான உட்கட்டமைப்போ, விளையாட்டு மைதானங்கள்‌ மற்றும்‌ உபகாரணங்களோ இல்லை என்பதை அறிவாரா? அரசுப்‌ பள்ளிகளை மேம்படுத்த, அவர்‌ என்ன நடவடிக்கைகள்‌ இதுவரை எடுத்துள்ளார்‌?


அரசுப்‌ பள்ளிகள் மேம்படுவதால்‌, தங்கள்‌ கட்சிக்காரர்கள்‌ நடத்தும்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை குறைந்து விடும்‌ என்ற அச்சத்திலும்‌, தங்கள்‌ கட்சிக்காரர்கள்‌ நடத்தும்‌ பள்ளிகளில்‌ 25% இடங்களை, ஏழை எளிய மாணவர்களின்‌ கல்விக்காக ஒதுக்க விரும்பாமலும்‌, ஒட்டுமொத்தமாக இந்தத்‌ திட்டத்தையே முடக்க நினைக்கிறதோ என்ற வகையில்‌ திமுக அரசின்‌ செயல்பாடுகள்‌ இருக்கின்றன. 


ஏழை எளிய மாணவர்கள்‌ கல்வி பெறுவதைத்‌ தடுக்க முயற்சிக்காமல்‌, திமுக அரசு உடனடியாக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்‌ தொகையை வழங்க வேண்டும்‌ என்றும்‌, இந்த ஆண்டு கல்வி உரிமைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, மாணவர்‌ சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்‌ என்றும்‌, அரசுப்‌ பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும்‌ தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்‌’’.


இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.