டெல்லி குர்கானில் ஓர் இளம் தாய் தனது மகனுடன் மூன்றாண்டுகளாக வீட்டிலேயே அடைபட்டுள்ளார். மூன்று ஆண்டுகளாக வேறு வீடெடுத்துத் தங்கிய கணவர் எவ்வளவோ முயன்றும் மனைவி வீட்டைவிட்டு வெளியே வராததால் போலீஸ், சுகாதார பணியாளர்கள் உதவியுடன் அவரை மீட்டுள்ளார்.


கொரோனா உலகையே புரட்டிப் போட்டுச் சென்றுவிட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால் கடைசியாக உயிர்களைக் காவு வாங்கிய டெல்டா திரிபுக்குப் பின்னால் பெரிய அளவில் உயிர்ப்பலிகள் ஏற்படவில்லை. இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் விலகவில்லை என்றுதான் உலக சுகாதார நிறுவனமும் கூறியுள்ளது. அதனால் கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க் அணிவது அவசியம். கைகள் சுத்தத்தை பேணுவது அவசியம். தடுப்பூசி கட்டாயம் என்று வலியுறுத்தி வருகிறது. இத்துடன் நாம் கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்களும் கூறுகின்றனர்.


ஆனால் இவை அத்தனையையும் மீறி குர்கானில் ஓர் இளம் தாய் தனது மகனுடன் மூன்றாண்டுகளாக வீட்டிலேயே அடைபட்டுள்ளார். மூன்று ஆண்டுகளாக வேறு வீடெடுத்துத் தங்கிய கணவர் எவ்வளவோ முயன்றும் மனைவியை வீட்டைவிட்டு வெளியே வராததால் போலீஸ், சுகாதார பணியாளர்கள் உதவியுடன் அவரை மீட்டுள்ளார்.


டெல்லி குர்கானை சேர்ந்தவர் சுஜன் மாஜி. இவர் பொறியாளராக உள்ளார். இவரது மனைவி முன்முன் மாஜி. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த 2020ல் முதல் கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் முன்முன் மாஜி கொரோனா அச்சத்தால் வீட்டினுள் அடைபட்டார். தான் அடைபட்டது மட்டுமில்லாது தனது மகனையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். வேலை முடிந்துவந்த கணவரை இனி வீட்டினுள் அனுமதிக்க முடியாது எனக் கூறி அவரை அனுப்பிவிட்டார். அவரும் சில நாட்களில் சரியாகிவிடுவார் என்று வாரங்கள், மாதங்கள் காத்திருந்தார். தனது பெற்றோர் வீட்டிலிருந்தவாறு அன்றாடம் வீட்டிற்கு வந்து மனைவியை வெளியே வருமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் எதற்கும் அசையவில்லை. அதன்பின்னர்  சுஜன் மாஜி தனியாக வாடகைக்கு வீடு பிடித்தார். அந்த வீட்டில் இருந்தாலும் மனைவி, மகனுக்குத் தேவையான பணத்தை அனுப்புவது வாடகை செலுத்துவது பலசரக்கை வாங்கிக் கொடுப்பது என எல்லாவற்றையும் செய்துள்ளார். 2020க்குப் பின்னர் முன்முன் கேஸ் வாங்குவதை நிறுத்திவிட்டு மின்சார அடுப்பிற்கு மாறினார். இப்படியே மூன்றாண்டுகள் கடந்து விட்டன. இதனால் கணவர் போலீஸை அணுகினார். போலீஸிடம் நான் இந்த விஷயத்தை இவ்வளவு காலம் விட்டிருக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் குடும்ப விஷயம் இதை எதற்காக சட்ட பிரச்சனையாக்க வேண்டும் என நினைத்து பொறுமையாக இருந்துவிட்டேன். ஆனால் இப்போது நிலைமை எல்லை மீறிவிட்டது. என் மனைவி, மகனை மீட்டுக் கொடுங்கள் என்று புகார் கொடுத்தார்.


அந்தப் புகாரை ஏற்று போலீஸ் உதவி ஆய்வாளர் பிரவீன் குமார் வீடியோ கால் மூலமாக அந்தப் பெண் மற்றும் அவரது மகனிடம் பேசினார். அப்போது அந்தச் சிறுவன் நான் சூரிய ஒளியில் விளையாடி மூன்றாண்டுகள் ஆகிவிட்டன என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு போலீஸ் உதவி ஆய்வாளர் மிகவும் நொறுங்கிப் போயுள்ளார். பின்னர் போலீஸ் குழு, மாவட்ட சுகாதார அமைப்பினருடன் அவர் அந்த வீட்டுக்குச் சென்றார். முன்முனுடன் பல மணி நேரம் பேசியுள்ளனர். ஆனால் அவர் கதவைத் திறக்கவே இல்லை. இதனால் வீட்டின் கதவை உடைத்து அவர்கள் உள்ளே சென்றார்கள்.


முன்முன் மற்றும் அவரது மகனை மீட்டனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். முன்முன் தீவிர மன அழுத்தம், மன பதற்றம் காரணமாக இவ்வாறு தன்னை வீட்டில் அடைதுக் கொள்ள அது மனநோயாக மாறிவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இப்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார். 


Car loan Information:

Calculate Car Loan EMI