அரசுப் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 234/77 ( Constituencies/Components) துறைசார் ஆய்வு 2022-23 ( Inspection- Analysis- Action) தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி , மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்கள், நூலகங்கள் என்று பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பல்வேறு இடங்களிலும் 77 வகையான ஆய்வுகளை மேற்கொள்ளும் துறைசார் ஆய்வு எனப்படும் திட்டம் தொடங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில், ''இந்தத் திட்டத்தின் மூலம் 234 தொகுதிகளிலும் 77 வகையான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறோம். இந்த ஆய்வுகள் முன் அறிவிப்பின்றி சர்ப்ரைஸ் விசிட் ஆக இருக்கப் போகிறது.
இந்த திட்டத்தின் மூலம் தொடக்கப் பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டியவை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்ய வேண்டியவை என்று பல்வேறு கூற்றுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதன்படி முதல் ஆய்வாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள (லேடி வில்லிங்டன் பள்ளியில்) இந்த ஆய்வு தற்போது தொடங்கப்பட்டுள்ளது .இந்த திட்டத்தின் முடிவில் இறுதியாக கொளத்தூர் தொகுதியில் ஆய்வு நடைபெறும். இந்த ஆய்வுகளின் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்களை தெரிந்து கொண்டு அதற்குரிய முறையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.
கோவை அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வழங்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், ''அது மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வரும் பள்ளி. எனினும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இதுகுறித்துக் கேட்டோம்.
அவர்கள் கூறும்போது, 'காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்கப்படுகிறது. நாங்கள் பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்தித் தருகிறோம் என்று ஒரு குழு வந்து கேட்டது. நாங்களும் சுத்தப்படுத்தும் பணிதானே என்று சம்மதித்தோம். ஆனால் முடித்துவிட்டுப் போகும்போது உறுதிமொழி எடுத்துக் கொண்டு சென்றனர். இனி அதுபோல நடக்காமல், பார்த்துக் கொள்கிறோம்' என்று தெரிவித்தனர்.
கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகள், மாநகராட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்கினாலும், பள்ளிக் கல்வித்துறையும் கவனிக்கும்'' என்று அறிவித்தார்.
மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குப் பதில் தன்னார்வலர்களைத் தேர்வு செய்வது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ''இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களின் செயல்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதால், அவர்களே எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்குப் பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.
எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்.
கல்வித் தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்குவது தொடர்பாக முறைகேடு நடந்திருந்தால், அதுகுறித்து கட்டாயம் விசாரிக்கப்படும்.
பள்ளிகளில் வலதுசாரி (Right), இடதுசாரி (Left) உள்ளிட்ட எந்தக் கருத்தியல்களும் நுழையக்கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளையும் விரைவில் ஆய்வு செய்ய உள்ளேன்.'' என்று று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.