கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் யாருக்கெல்லாம் தகுதி, இல்லை, வழிகாட்டி எண் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவிகளின்‌ உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும்‌ பொருட்டு, சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித் திட்டத்தின்‌ கீழ்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில்‌ சேரும்‌ அனைத்து மாணவிகளுக்கும்‌, சான்றிதழ்‌ படிப்பு / பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில்‌ இடைநிற்றல்‌ இன்றி கல்வி பயின்று முடிக்கும்‌ வரை, மாதம்‌ ரூ.1,000/- அவர்களின்‌ வங்கிக்‌ கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்‌. 


இந்த மாணவிகள்‌ ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பற்று வந்தாலும்‌ இத்திட்டத்தில்‌ கூடுதலாக உதவி பெறலாம்‌.


திட்டத்தில்‌ பயன்‌ பெறுவதற்கான தகுதிகள்‌


* மாணவிகள்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்நாட்டில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ படித்து தமிழ்நாட்டில்‌ உயர் கல்வி பயில்பவராக இருத்தல்‌ வேண்டும்‌.


* தனியார்‌ பள்ளியில்‌ ஆர்டிஇ-ன்‌ கீழ்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயின்ற பின்‌ 9ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை அரசுப்‌ பள்ளியில்‌ படித்த மாணவியரும் இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனடையலாம்‌.


“அரசுப்‌ பள்ளிகள்‌ என்பது பஞ்சாயத்து யூனியன்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகள்‌, ஆதிதிராவிடர்‌ நலப்‌ பள்ளிகள்‌, நகராட்சி பள்ளிகள்‌, மாநகராட்சி பள்ளிகள்‌, பழங்குடியினர்‌ நலப்‌ பள்ளிகள்‌, கள்ளர்‌ சீர்மரபினப்‌ பள்ளிகள்‌, பிற்படுத்தப்பட்டோர்‌/ மிகவும்‌ பிற்படுத்தப்பட்‌ டோர்‌ நல பள்ளிகள்‌, மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை பள்ளிகள்‌, வனத்துறை பள்ளிகள்‌, சமூக பாதுகாப்புத்‌ துறை பள்ளிகள்‌ போன்றவற்றில்‌ பயிலும்‌ மாணவிகளும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனடையலாம்‌.


* மாணவிகள்‌ 8 (அ) 10 (அ) 12 வகுப்புகளில்‌ படித்து பின்னர்‌ முதன்‌முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும்‌ படிப்புக்கு மட்டுமே இத்திட்டம்‌ பொருந்தும்‌.


* சான்றிதழ் படிப்பு  (Certificate course) பட்டயம் (Diploma / ITI, D.TEd.,courses), இளநிலைப் பட்டம் (Bachelor's Degree) (B.A., B.Sc., B.Com., BBA., BCA. and all Arts & Science, Fine Arts Courses), தொழில்நுட்பக் கல்வி (B.E., B.Tech, M.B.B.S., B.D.S., B.Sc.,(Agri). B.V.Sc., B.Fsc.,B.L., etc.) துணை மருத்துவப் படிப்பு (Nursing, Pharmacy, MedicalLab Technology, Physiotherapy etc., ].




யாருக்கெல்லாம் பொருந்தாது?



* தொலைதூரக்‌ கல்வி மற்றும்‌ திறந்தவெளி பல்கலைக்கழகத்தில்‌ பயிலும்‌ மாணவிகளுக்கு இத்திட்டம்‌ பொருந்தாது.


* 2021-2022ஆம்‌ ஆண்டில்‌, இறுதியாண்டு பயிலும்‌ மாணவிகள்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனடைய இயலாது. ஏனெனில்‌ ஒரு சில மாதங்களில்‌ இம்மாணவியர்கள்‌ தங்களது இளநிலைப்‌ படிப்பினை நிறைவு செய்து விடுவார்கள்‌.


* இத்திட்டத்தின்‌ கீழ்‌ இளநிலைப் படிப்பு பயிலும்‌ மாணவிகள்‌ மட்டுமே பயனடைய இயலும்‌. முதுநிலை படிப்பு பயிலும்‌ மாணவியர்கள்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெற இயலாது.


* 2022-2023ஆம்‌ கல்வியாண்டில்‌, மாணவியர்கள்‌ புதிதாக மேற்படிப்பில்‌ முதலாம்‌ ஆண்டு சேர்ந்த பின்னர்‌, இணையதளம்‌ வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்‌.


* மேலும்‌, இதர முதலாம்‌ ஆண்டிலிருந்து இரண்டாம்‌ ஆண்டு செல்லும்‌ மாணவியரும்‌, இரண்டாம்‌ ஆண்டிலிருந்து மூன்றாம்‌ ஆண்டு செல்லும்‌ இளங்கலை பட்டப்படிப்பு பயிலும்‌ மாணவியர்களும்‌, தொழிற்கல்வியைப்‌ பொருத்தமட்டில்‌ மூன்றாம்‌ ஆண்டிலிருந்து நான்காம்‌ ஆண்டிற்கு செல்லும்‌ மாணவிகளுக்கும்‌, மருத்துவக்‌ கல்வியைப்‌ பொருத்தமட்டில்‌ நான்காம்‌ ஆண்டிலிருந்து ஐந்தாம்‌ ஆண்டு செல்லும்‌ மாணவியர்களும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனடையலாம்‌.


*  இத்திட்டத்தில்‌ பயன்பெறுவது குறித்து தங்களுக்கு தேவையான தெளிவுரைகள்‌ / கூடுதல்‌ விவரங்களைக் கட்டணமில்லா தொலைபேசி எண்‌ 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்‌ என தெரிவிக்கப்படுகிறது.


* இளநிலை கல்வி பெறும்‌ அனைத்து மாணவியரும்‌ (இளநிலை முதலாம்‌ ஆண்டு சேரும்‌ மாணவியர்களும்‌, இளங்கலை / தொழிற்கல்வி/ மருத்துவக்‌ கல்வியில்‌ 2ஆம்‌ ஆண்டு முதல்‌ 5ஆம்‌ ஆண்டு வரை பயிலும்‌ மாணவிகளும்‌) இத்திட்டத்திற்காக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்‌ https://penkalvi.tn.gov.in/  வழியாக தங்கள்‌ விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்யக் கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.