இந்தியாவின் இருச்சக்கர மார்க்கெட்டில் வரவேற்பைப் பெற்றிருக்கும் பல்சர் 250ன் அடுத்த வேரியண்ட்டான பல்சர் என்160ஐ களமிறக்கியிருக்கிறது பஜாஜ் நிறுவனம்.


சூப்பர் ஹிட்டடித்த பல்சர் வாகனம்:


இந்தியாவில் குறைந்த சிசி கொண்ட சாதாரண இருச்சக்கர வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில், இளைஞர்களிடத்தில் ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளின் மீது காதல் தீயை பற்ற வைத்ததில் பஜாஜ் பல்சருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. பட்டிதொட்டியெங்கும் பரவிய இந்த மாடல் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்திய இருச்சக்கர மார்க்கெட்டில் பல்சரை 2001ம் ஆண்டு அறிமுகப்படுத்திய பிறகு 125, 135, 150, 160, 180, 200, 220, 250 சிசிக்களில் பல்சர் பைக்குகளை களமிறக்கியிருக்கிறது.


புதிய அறிமுகம் பல்சர் என்160:


கடந்த ஆண்டு வெளியான இரண்டு புதிய மாடல்களான பல்சர் எஃப்250 மற்றும் என்250 ஆகிய மாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனையடுத்து, பஜாஜ் என்250ஐப் போலவே 160சிசி எஞ்சின் செயல்திறன் கொண்ட பஜாஜ் என்160 என்ற புதிய பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது பஜாஜ் நிறுவனம். இந்த பைக்கின் வடிவமைப்பு பார்ப்பதற்கு என்250ன் லைட் வெர்ஷன் போல இருப்பதாகக் கூறப்படுகிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டபுள் சேனல் ஏபிஎஸ் என்ற இரு வேரியண்ட்களில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது.




சிறப்பம்சங்கள் என்னென்ன?


டிசைனைப் பொறுத்தவரை என்250ஐயிடம் கடன் வாங்கியே என்160யும் வடிவமைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது. ப்ரொஜக்டர் லென்ஸ் கொண்ட முகப்பு விளக்கு, எல்இடி டிஆர்எல்கள், பக்கவாட்டு மற்றும் பின்பக்க வடிவமைப்புகள் ஸ்போர்ட்ஸ் வாகனத்திற்குரிய வடிவமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பைக்கில் பெரிய மாற்றம் என்றால் அது  மோட்டார் சிறிது இடம்பெயர்ந்திருப்பது தான். இந்த பைக்கின் இஞ்சினானது 164.82 சிசி ஒற்றை சிலிண்டர் சக்தி மற்றும் ஏர் கூல் எஞ்சின் 8,750 ஆர்பிஎம்-ல் 15.7 பிஹெச்பி சக்தியையும், 14.65 என்எம்ல் 6,750 டார்க்கையும் கொடுக்கிறது. இது பல்சரின் முந்தைய வெர்சன்களில் ஒன்றான என்எஸ் 160 ஐவிட ஒரு பிஹெச்பி சக்தி குறைவானது. தற்போது வெளியாகவிருக்கும் என்160, என்எஸ் 160ஐ ரீப்ளேஸ் செய்யும் என்று கூறப்படுகிறது. பாதி டிஜிட்டல் மற்றும் பாதி மோனோ ஓடோ மீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சஸ்பென்சனைப் பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்சனையும் கொண்டுள்ளது. இந்த பைக் 17 இன்ச் அல்லாய்வீலையும், அதன் முன்பக்க வீலில் 100/80 டிஸ்க் மற்றும் 130/70 அளவிளான பின்பக்க டிஸ்க் ப்ரேக்கையும் கொண்டுள்ளது. இதனுடன் சென்மி இன்ஸ்ட்ருமெண்ட் கண்ட்ரோல் மற்றும் யூஎஸ்பி கனெக்டிவிட்டியும் வருகிறது.




நிறம் மற்றும் விலை:


புதிய பல்சர் என்160 பைக்கானது 14 லிட்டர் பெட்ரோல் டேங்கையும், மொத்தமாக 154 கிலோ எடையையும் கொண்டுள்ளாது. இது சிங்கிள் ஏபிஎஸ் மற்றும் டபுள் ஏபிஎஸ் என்ற இரண்டு வகைகளில் வெளியாகியுள்ளது. சிங்கிள் ஏபிஎஸ்-ல் ரேஸிங் ரெட், டெக்னோ க்ரே மற்றும் கரீபியன் ப்ளூ ஆகிய 3 வண்ணங்களில் வருகிறது. அதே நேரத்தில், டபுள் ஏபிஎஸ் வேரியண்ட்டில் ப்ரூக்ளின் ப்ளாக் என்ற ஒற்றை நிறத்தில் மட்டும் வெளியாகியுள்ளது. விலையைப் பொருத்த வரை ஒற்றை ஏபிஎஸ் வாகனம் 1.23 லட்சம் ரூபாய்க்கும், இரட்டை ஏபிஎஸ் வாகனம் 1.28 லட்ச ரூபாய் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் ஆன்ரோட் விலையானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்று தெரிகிறது.




சந்தையில் இருக்கும் போட்டி வாகனங்கள்:


ஏற்கனவே இருச்சக்கர வாகன் சந்தையில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் மற்றும் சுசுகி கிக்ஸர் ஆகிய வாகனங்கள் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், பஜாஜின் புதிய மாடலான என்160 எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறும் என்பது போகப்போகத் தெரியும்.