ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்ஆர்பி தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, வெவ்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதில் தமிழக அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆட்சேர்ப்பு வாரியமே ஆர்ஆர்பி எனப்படுகிறது. இதன் முக்கியப் பணி குரூப் சி பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுப்பது. நாடு முழுவதும் 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக ரயில்வே பணியிடங்களுக்காக ஆட்களைத் தேர்வு செய்ய, ஒற்றைத் தேர்வு முறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் அசாதாரணமான அளவில் தேர்வர்கள் விண்ணப்பிக்கும்போது, அவர்களைத் தரத்தின் அடிப்படையில் வடிகட்ட இரண்டு கட்ட கணினிவழித் தேர்வு முறை (CBT1, CBT2) நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே 2019-ல் ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தேர்வு (RRB-NTPC) அறிவிப்பு வெளியானது. குறிப்பாக ரயில்வே இளநிலை எழுத்தர், ரயில்வே உதவியாளர், காவலர், நேரக் காவலர் போன்ற அடிப்படைப் பணிகளுக்கும் ஸ்டேஷன் மாஸ்டர் வரையிலான உயர்நிலைப் பணியிடங்களுக்கும் 35,281 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதில், 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற அடிப்படைத் தகுதியோடு சுமார் 11 ஆயிரம் பதவிகள் இருந்தன. மீதமுள்ள 24 ஆயிரம் உயர்நிலைப் பணியிடங்கள் அதிக ஊதியத்துடன் கூடியவை. இதற்குக் குறைந்தபட்சத் தகுதியாக பட்டப்படிப்பு இருந்தது. இந்தத் தேர்வுக்கு சுமார் 1.25 கோடி தேர்வர்கள் விண்ணப்பித்திருந்ததாகத் தகவல் வெளியானது.
கொரோனா காரணமாகத் தள்ளிப்போன இதற்கான முதல்கட்டத் தேர்வு (CBT-1) இறுதியாக 2020ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கியது. 2021ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை 7 கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெற்றது.
இதற்கான தேர்வு முடிவுகள் 2022ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி அன்று, ஆர்ஆர்பி மாநில இணையதளங்களில் வெளியாகின. இதில் நிலை 4 மற்றும் நிலை 6 ஆகிய பதவிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் வெளியாகின. இரண்டாம்கட்டத் தேர்வு மே 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நிலை 2, 3 மற்றும் 5 ஆகிய பதவிகளுக்கான தேர்வுத் தேதிகள் பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மே மாதம் நடைபெறும் இரண்டாம்கட்டத் தேர்வுக்குத் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான விண்ணப்பதாரர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு வெவ்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரருக்கு ஆந்திரப் பிரதேச மாநிலம், நெல்லூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட மாணவர் ’ஏபிபி நாடு’விடம் கூறும்போது, ’’பொதுவாகப் போட்டித் தேர்வுகளுக்கும் யூபிஎஸ்சி, ஐபிபிஎஸ், எஸ்எஸ்சி தேர்வுகளுக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போதே தேர்வர்களுக்குத் தேர்வு மையங்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் ஆர்ஆர்பி தேர்வில் எந்தத் தேர்வு மையத்தில் தேர்வெழுத விருப்பம் என்று ரயில்வே வாரியம் சார்பில் கேட்கப்படாததே இதற்கு முக்கியக் காரணம்.
ஈரோட்டைச் சேர்ந்த நான் என்டிபிசி முதல்கட்டத் தேர்வை பெங்களூருவில் எழுதினேன். இரண்டாம்கட்டத் தேர்வுக்கு நெல்லூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 கட்டத்தேர்வு மீதம் உள்ளது. அந்தத் தேர்வுகளை எந்த மாநிலத்தில் எழுத வேண்டும் என்று தெரியவில்லை.
மாணவர்களாவது சிரமப்பட்டு, வேறு மாநிலத்துக்குச் சென்று தேர்வை எழுதலாம். மாணவிகளுக்கு அந்த வாய்ப்பு பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பதால், அவர்கள் இத்தகைய தேர்வுகளை எழுதுவதே இல்லை. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு, உரிய தீர்வை அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
அதேபோல மதுரையைச் சேர்ந்த விண்ணப்பதாரருக்கு கர்நாடக மாநிலம், ஷிமோகாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மற்றொரு ட்விட்டராட்டி தெரிவித்துள்ளார். அவர் சென்னை பிராந்தியத்துக்காகவே விண்ணப்பித்ததாகவும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த மற்றொரு தேர்வர், கர்நாடக மாநிலம், உடுப்பியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதில் தமிழக அரசு தலையிட்டு, தேர்வு மையங்கள் அந்தந்த மாநிலங்களிலேயே அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் தேர்வர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.