கோவை உக்கடம் கெம்பட்டி காலணி பகுதிடை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். 33 வயதான இவருக்கு, வசந்தி என்ற மாணவி உள்ளார். சந்தோஷ்குமாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், வசந்த் மற்றும் பிரகாஷ் ஆகியோர் நண்பர்களாக இருந்தனர். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன், முத்துப்பாண்டி, சுரேஷ், சூர்யா, மாப்பிள்ளை சுரேஷ், சதீஸ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கஞ்சா உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இரண்டு கும்பலுக்கும் இடையே அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் டி.கே மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டிருந்த வசந்திடம் சூர்யா மற்றும் அவரது நண்பர்களும் இணைந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தோஷ், சூர்யாவை தொடர்பு கொண்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தொடர்பாக கேட்ட போது, தாங்கள் அப்படித் தான் செய்வோம், தங்களை மீறி எதுவும் செய்ய முடியாது என  சவால் விடுத்துள்ளார். மேலும் கடந்த மூன்று நாட்களாக சந்தோஷை தொடர்பு கொண்ட சூர்யா தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். 


இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மது போதையில் இருந்த சூர்யா, சந்தோஷை தொடர்பு கொண்டு பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம்  என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இரவு எச்.எஸ் சாலையில் நின்று கொண்டிருந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் பிரகாஷும் அவரது நண்பர்களும் சென்று கொண்டிருந்த ஆட்டோவை வழி மறித்தனர். அப்போது சூர்யாவின் நண்பரான முத்துப்பாண்டி, தான்  கையில் வைத்திருந்த கத்தியால் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை உடைத்த போது, ஆட்டோவில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர். இதில் சந்தோஷ் மற்றும் சுரேஷ் பிடித்து கொண்ட கும்பல் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சூர்யாவும் அவரது நண்பர்களும் தப்பி சென்றனர். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சுரேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த உக்கடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய பாஸ் என்கிற பாஸ்கரன், சனர் சதீஸ், மாப்பிள்ளை சுரேஷ் ஆகிய மூவரை கைது காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகளான சுருக்குளி சுரேஷ், முத்துப்பாண்டி, சூர்யா ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்