நாடு முழுவதும் உள்ள முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி போன்ற நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு கூட்டு நுழைவுத் தேர்வு எனப்படும் ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கடும் போட்டி நிறைந்த இந்தத் தேர்வு பல்வேறு அமர்வுகளாக ஆன்லைன் முறையில் நடைபெறும்.




இந்தநிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின மாணவிகள் அசத்தியுள்ளனர். ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்த மாணவிகளுக்கு திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் எனப்படும் என்.ஐ.டி.,யில் பொறியியல் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்.ஐ.டி சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.


ஜே.இ.இ தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று, தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். இந்தநிலையில் திருச்சி என்.ஐ.டி.,யில் மாணவி ரோகிணிக்கு வேதிப் பொறியியலும் (Chemical Engineering), மாணவி சுகன்யாவுக்கு உற்பத்தி பொறியியலும் (Production Engineering) படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.




60 ஆண்டுகளுக்கு பிறகு பழங்குடியின மாணவி ரோகிணி சாதனை



இதுகுறித்து மாணவி ரோகிணி கூறும் போது, “மலைவாழ் மக்களுக்கான பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்து ஜே.இ.இ தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சி பெற்று, திருச்சி என்.ஐ.டியில் சேர்க்கை பெற்றுள்ளேன். பி.இ., கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்து உள்ளேன்.


என் படிப்புக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. பள்ளியில் படித்தபோது என்ஐடி கெமிக்கல் ஆய்வகத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, ஆசிரியர்களிடம் என்.ஐ.டியில் சேர்க்கை பெற வேண்டும் என்று கேட்டேன்.


பள்ளியில் பிளஸ் டூ தேர்விலும் ஜேஇஇ தேர்விலும் தேர்ச்சி பெற்றதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி உதவி செய்தனர். என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மேல்படிப்புக்கு உதவி செய்யும் முதல்வர் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.