விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  Vikravandi bypoll


விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் Vikravandi bypoll வாக்குபதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி. அன்புமணி, பனையபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.


பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்....  தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் திமுகவை சேர்ந்தது பிரமுகர்களே மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்ததாகவும் மேலும் திமுகவைச் சேர்ந்த வெளி மாவட்ட நபர்கள் வாக்குச்சாவடி மையம் அருகே சுற்றி வருவதாக தெரிவித்தார். மேலும் தனது உடல்நிலை சரியில்லை என தவறான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்தார்.


 


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் ஜூலை 10 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள்


விக்கிரவாண்டி தொகுதியில்  1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.


தேர்தல் களத்தில் 29 வேட்பாளர்கள் :


இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.


276 வாக்குச்சாவடி மையங்கள் 


விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றம் வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு பணி ஆணை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் (Third Level Randomization )  நடத்தப்பட்டது. 3 மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகள் , 41 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன.  220 CRPF உட்பட 2651 காவல் ஆளிநர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தேர்தல் பணியில் 1355 அலுவலர்கள் : 


276 வாக்குச்சாவடி மையங்களில், 331 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -1, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் - 2, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -3, 31 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் - 4 என மொத்தம் 1355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்புதிவு நிலை அலுவலர்களுக்கும், 44 பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள 53 நுண்பார்வையாளர்களுக்கும் பணி ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டது.