சென்னை ஐஐடி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் புற்றுநோய் சிகிச்சைகளுக்கான ஆய்வுகளின் சமீபத்தில் சாதனை படைத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கீழ் செயல்படும் `பிவோட்’ என்ற கருவியை உருவாகியுள்ள சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் இதன்மூலமாக, புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணுக்களைக் கண்டுபிடிக்க முடியும் எனக் கூறியுள்ளனர்.
`பிவோட்’ என்ற இந்தக் கருவி புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணுக்களைக் கண்டுபிடிக்கிறது. மரபணு மாற்றம், மரபணு செயலாற்றும் விதம் முதலான டேட்டாக்களின் உதவியுடன் இந்தக் கருவி புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மரபணுக்களை எளிதில் கணித்துவிடுகிறது.
தற்போது சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினர் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் முதலானவற்றைக் கண்டறிய முடியும்.
இதுகுறித்து சென்னை ஐஐடியைச் சேர்ந்த முனைவர் கார்த்திக் ராமன் தனது அறிக்கையில், `புற்றுநோய் என்பது சற்றே சிக்கலான நோய் என்பதால், ஒரே சிகிச்சை வசதி மூலம் மொத்தமாக சரிசெய்துவிட முடியாது. எனினும், புற்றுநோய் சிகிச்சை என்பது மேலும் முன்னேறி வரும் சூழலில், இத்தகைய கண்டுபிடிப்புகள் நோயாளிகளுக்குப் பெரிதும் பலன் தரும்’ எனக் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் புற்றுநோய் காரணமாக அதிகளவில் மரணங்கள் நிகழ்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, கடந்த 2020ஆம் ஆண்டு மரணமடைந்த 6 பேரில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்தவர் எனக் கூறப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைகள் பெரும்பாலும் நோயாளிகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியதாக இருக்கும் சூழலில், இத்தகைய கண்டுபிடிப்புகள் நோயாளிகளுக்குத் தனிப்பட்ட சிகிச்சையை வழங்கக்கூடியதாக அமையும். மேலும், இதன்மூலம் மருத்துவர்கள் புற்றுநோயின் தொடக்கம் முதல் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிறப்பு சிகிச்சையை குறிப்பிட்ட நோயாளிகளுக்கு வழங்குவார்கள்.
சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆய்வு மாணவரான மாளவிகா சுதாகர் இதுகுறித்து பேசிய போது, `இந்த சிகிச்சையின் ஆய்வுகள் தற்போது தொடக்க நிலையில் இருக்கின்றன. பிவோட் மூலமாக மரபணுக்கள் கண்டறியப்பட்டு, அதன் மூலமாக ஆய்வுகள் மேலும் தொடரும்’ எனக் கூறியுள்ளார். மேலும், பிவோட் தொழில்நுட்பம் மூலமாக மேலும் கூடுதலான புற்றுநோய் வகைகளைக் கண்டறிவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.