கவுரவ விரிவுரையாளர் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 


இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் இன்று கூறி உள்ளதாவது: 
 
’’தமிழக அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு, நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை வரவேற்கிறோம்.    


கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இத்தகைய கவுரவ விரிவுரையாளர் பணி நியமனங்களுக்கு முறையான அறிவிப்பு செய்யாமலும், வெளிப்படைத் தன்மை இல்லாமலும் நிரப்பப்பட்டதால், தகுதியுடைய மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் பலர் பணி வாய்ப்பு பெற முடியாமல் போயுள்ளது.  தற்பொழுது மாநில அளவில் அறிவிப்பு செய்து இணைய வழியில் மனுக்கள் பெற்று நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அதிமுக கால மனு-அநீதி ஏற்படுத்திய இழிவான அடையாளங்களில் இருந்து மீண்டு மாற்றுத்திறனாளிகள் சுயமான தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள இது உதவும். 


மேலும், முதுநிலை படிப்பு,  முதுநிலை ஆராய்ச்சி படிப்பு (எம்.பில்), முனைவர் பட்டம் (பி.எச்.டி), மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு (SLET) மத்திய விரிவுரையாளர் தகுதித் தேர்வு (NET) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தகுதியான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஓர் ஆண்டுக்கு மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் பெற்றிட வழிவகை செய்யும் இந்த பணி வாய்ப்பு, வாழ்வாதாரத்திற்கு  பயனுள்ளதாய் அமையும்.


மாற்றுத்திறனாளிகளுக்கு சம பணி வாய்ப்பு கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கான இடங்கள் உறுதி செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வரும் நிலையில், “மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் உறுதி செய்யப்படும் என்றும்,  மாநில அளவில் மையப்படுத்தப்பட்டு  மற்றவர்களுக்கு முன்னதாகவே நாளை (03.01.2023) சிறப்பு நேர்முகத் தேர்வாக நடத்தப்படும் என்றும்” உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம்.  


துறைவாரியாக பார்க்காமல் ஒட்டுமொத்தமான எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணி வாய்ப்பை கணக்கிட்டு உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்திருப்பதையும் வரவேற்கிறோம். அதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பங்கை உறுதி செய்யும் வகையில் கலைப் பாடங்களில் முன்னுரிமை அளித்து அறிவித்திருப்பதையும் வரவேற்கிறோம்.


எனினும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம்-2016 பிரிவு 35-ன்படி முழுமையாக நடைமுறைப்படுத்த கீழ்க்கண்ட வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்:


* கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்காக உயர் கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள  அரசாணை 269-ன்படியும்,  இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 07.07.2021ல் வெளியிட்ட சமவாய்ப்புக் கொள்கை அரசாணை எண்-02 வழிகாட்டுதலின் அடிப்படையிலும் 5% பணி வாய்ப்பை வழங்கிட வேண்டுகிறோம்.


* உயர் கல்வித்துறை அரசாணையின்படி 7,198 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் உள்ளதாகவும் அதில் 5,303 இடங்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 1,895 இடங்களுக்கு தற்போது நிரப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பணி வாய்ப்பு 1,895ல் 5% இடத்துக்காக மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.  


* ஏற்கனவே நிரப்பப்பட்ட 5,303 இடங்களில் ஐந்து சதவீதத்திற்கான பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாத நிலையில் அதனை நேர்படுத்திடும் வகையில், தமிழக முதலமைச்சரால் வெளியிடப்பட்ட சம வாய்ப்புக் கொள்கையைப் பின்பற்றி 7,198 இடங்களில் 5% பணி வாய்ப்பு என்ற அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 360 இடங்களுக்கு குறையாமல் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பின்னடைவு காலிப்பணியிடங்களாக கணக்கிட்டு, தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்கிட வேண்டுகிறோம்.
 
* கற்பித்தல் பணிகளில் கூடுதலாக பார்வை மாற்றுத்திறனாளிகள் பணியாற்றும் வாய்ப்புள்ளது என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான 5% பணி வாய்ப்புகளில் 2% குறையாமல், அதாவது 144 பணியிடங்களுக்கும் குறையாத இடங்களை தகுதியான பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.


எனவே, மேற்படி கோரிக்கைகளை ஏற்று உடல் ரீதியான ஒடுக்கப்பட்டோரான மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு சுயமரியாதை வழங்கிடும் சமூக நீதியை உறுதிப்படுத்திட வேண்டும்’’ என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாபோர் உரிமைகளுக்கான சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.