தூத்துக்குடியை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.37 லட்சத்தை மோசடி செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்த நபரை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.




தூத்துக்குடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த செலாஸ்டின் மகன் பனிமய கிளாட்வின் மனோஜ் (38). இவர் தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அண்மையில் ஒரு தகவல் வந்துள்ளது. அதில் மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் உள்ள இரண்டு கால்நடை மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து கால்நடை மருந்துகளை வாங்கி ஏற்றுமதி செய்ய சரியான நபர் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை நம்பிய கிளாட்வின் மனோஜ் அந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரிடம் பேசிய வேவ்வேறு நபர்கள் மருந்துகளை அனுப்பி வைப்பதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.36,98,800 பணத்தை பெற்றுள்ளனர். கிளாட்வின் மனோஜிம் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், அந்த நபர்கள் மருந்துகளை அனுப்பி வைக்கவில்லை. அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.




தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிளாட்வின் மனோஜ் இதுதொடர்பாக தூத்துக்குடி சைபர் கிரைம் குற்றப்பிரிவில் புகார் செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீஸார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.




இந்த விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை பகுதியில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருநபர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த 29-ம் தேதி நவி மும்பைக்கு சென்று அங்குள்ள உல்வேநோட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த இஸி பிடலிஸ் நூபுசி (42) என்ற நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 




தொடர்ந்து அவரை போலீஸார் நேற்று தூத்துக்குடிக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள இஸி பிடலிஸ் நுபுசி இதேபோன்று மேலும் பல மோசடிகளிலும் ஈடுபட்டிருப்பதும், இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.