பள்ளிகளில் தமிழ் பாடவேளைகளை குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 


பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தமிழ் பாடவேளை எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பி உள்ளது. வாரத்திற்கு 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், 6-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 


நடந்து முடிந்த  10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தமிழ் மொழிப் பாட வேளைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல சமூக அறிவியல் பாடத்திலும் பாடவேளைகள் குறைக்கப்பட்டுள்ளன. 


47 ஆயிரம் மாணவர்கள் தோல்வி


10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே உள்ளது. 2017-ம் ஆண்டு 31,625 மாணவர்களும் 2018-ம் ஆண்டு 33,707 மாணவர்களும் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தனர். 2019-ம் ஆண்டு 36,108 பேர் தேர்ச்சி பெறவில்லை. 2020, 2021ஆம் ஆண்டில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில், 2022 பொதுத் தேர்வு முடிவுகளில் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை 47,000 ஆக அதிகரித்தது. 


இந்த சூழலில், தமிழகப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடவேளைகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 6-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி குறைந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் இந்த நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.




ராமதாஸ் வலியுறுத்தல்


இந்நிலையில் பள்ளிகளில் தமிழ் பாடவேளைகளை குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:


’’தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 6 - 10 வகுப்புகளுக்கான தமிழ்  மொழிப் பாடத்திற்கான  பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழில் இருந்து ஆறாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த முடிவு மிகவும் தவறானதாகும்!


வாரத்திற்கு ஒரு பாட வேளை நீதி போதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க, தேவையான  நடவடிக்கை.  அதற்காகப் பிற பாட வேளையை குறைத்ததுடன் நிறுத்தியிருக்கலாம்.  தமிழ் பாட வேளையையும் குறைத்திருக்கத் தேவையில்லை. அது தமிழுக்கு செய்யும் அவ மரியாதை!


எனவே, தமிழ் பாடவேளையைக் குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். முன்பு இருந்தவாறே வாரத்திற்கு 7 பாட வேளைகளைத் தமிழுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை  மாணவர்களுக்கு வழங்க வேண்டும்’’.


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண