அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புன்னகை என்னும் புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். மாணவர்களின் பல் பாதுகாப்புக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 


மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 'புன்னகை' பல் பாதுகாப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது.   அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். சென்னை, நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 


முதல் கட்டமாக 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் வாய் வழித் தொற்று நோய்களைத் தடுக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 


பள்ளிக் குழந்தைகளை பரிசோதித்து அவர்களுக்கு ஏற்படும் வாய் வழி நோய்கள், பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தீர்வு காண்பதற்கும் இத்திட்டம் பயன் தரும். 


இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பல் பரிசோதனைகளை செய்து அதன்மூலம் அவர்களுக்கு வாயில் ஏற்படுகின்ற பொதுவான நோய்களான பல் சொத்தை, ஈறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.




பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:


’’தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் நானும், நமது துறையின் செயலாளர் உள்ளிட்டவர்களுடன் இன்று புன்னகை என்கின்ற புதிய திட்டத்தினை இப்பள்ளியில் தொடங்கி வைத்திருக்கிறோம்.


தமிழ்நாடு முதலமைச்சர் துணை முதலமைச்சராக இருந்தபொழுது, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் சீரிய ஏற்பாட்டில் பல் பரிசோதனைகள் செய்யப்பட்டன இதன் தொடர்ச்சியாக நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒட்டுமொத்தமாக சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள மாணவியருக்கும் பல் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும் என்கின்ற கோரிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.


இந்திய அளவில் 5 முதல் 15 வயது வரை குழந்தைகளுக்கு ஏறத்தாழ 50% முதல் 60% குழந்தைகளுக்கு பல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளன. எனவே இந்த நோய்களிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கும், அவர்களை காப்பதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், இன்றைய நிகழ்ச்சியில் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்கள் இந்த நடமாடும் பல் மருத்துவ வாகனத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்காக குறிப்பாக அரசுப் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்துகின்ற, மாநகராட்சி பள்ளிகள் அதேபோல் அரசு நிதியுதவி பெறுகின்ற பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்வார்கள்.


சென்னையில் பயிலும் 54,000 மாணவர்களுக்கு பரிசோதனைகள் முடிவுற்றவுடன் தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதி பங்களிப்போடு தமிழ்நாட்டின் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இருக்கின்ற மாணவ. மாணவியர்களுக்கு பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்படவிருக்கிறது. இப்படி தொடர்ந்து நடத்தப்பட இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள 4 இலட்சம் குழந்தைகள் இதன் மூலம் பயன்பெற உள்ளார்கள்’’.


இவ்வாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.


முன்னதாக நடமாடும் பல் மருத்துவ ஊர்தியில் அளிக்கப்படும் பல் சிகிச்சையை அமைச்சர்கள் மேற்பார்வையிட்டனர். அத்துடன் புகையிலை ஒழிப்பு கையெழுத்து பிரச்சார பலகையில் கையெழுத்து இட்டு, மாணவர்களின் கல்விப் பொருட்கள், சிற்றேடுகள் மற்றும் குறுந்தகடுகளை வெளியிட்டனர்.