மாரண்டஹள்ளி அருகே தாயை இழந்து சுற்றி திரியும் இரண்டு குட்டி யானைகளையும் பாதுகாப்பாக பிடிப்பதற்கு ஆங்காங்கே உணவுகளை வைத்து வனத் துறையினர் இரண்டாவது நாளாக கண்காணித்து வருகின்றனர்.

 


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரகத்தில் மாரண்ட அள்ளி அருகே 2 குட்டிகளுடன் 2 பெண் மற்றும் 1 மக்னா யானை என 5 யானைகள் ஏரிகளில் முகாமிட்டு குளித்தும், விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது.  இந்நிலையில், பாலக்கோடு வட்டம் காளிகவுண்டன் கொட்டாய்  பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நேற்று முன் தினம் இரவு 2 பெண் மற்றும் மக்னா யானை என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தது. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள், தாய் உயிரிழந்தது தெரியாமல் தட்டி தட்டி எழுப்பி பரிதாபமாக அதே பகுதியிலேயே தவிப்புடன் சுற்றி வருகிறது.

இந்த இரண்டு குட்டி யானைகளையும் பாதுகாப்பாக மீட்டு முதுமலை சரணாலயத்திலும், யானைகள் கூட்டத்திலும் விடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.



 

இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட வனத் துறையினர் மாவட்ட வன அலுவலர் அப்பல்லோ நாயுடு, மண்டல வன கோட்ட அலுவலர் வின்சென்ட், மருத்துவர் பிரகாஷ், பாலக்கோடு  வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத் துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் யானையை பாதுகாப்பாக மீட்பதற்கு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் யானைக்கு முலாம்பழம், பலாப்பழம், கோசாப் பழம், குளுக்கோஸ், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளை ஆங்காங்கே வைத்து, கேமரா மூலம் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.  இந்த குட்டி யானைகள் உணவை எடுப்பதற்கு வந்தால், பாதுகாப்பாக யானையை பிடிப்பதற்கு வலையோடு வனத் துறையினர் காத்திருகின்றனர். ஆனால் தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளும் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் நுழைவதும், மீண்டும் தனது தாய் இருந்த இடத்திற்கு வந்து பார்ப்பதும் என சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.



 

இன்று இரண்டாவது நாளாக யானை உயிரிழந்த பகுதிக்கு அருகில் உள்ள கல்லாகரம் பகுதியில் இரண்டு குட்டி யானைகளும் முகாமிட்டுள்ளது. இதனை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் 30க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் வனத்துறையினர் வைத்துள்ள உணவுகளை யானை உண்பதற்கு வந்தால் அப்பொழுது பாதுகாப்பாக பிடிப்பதற்கு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் யானையைப் பிடித்து முதுமலை முகாமிற்கு அழைத்துச் செல்லவும் யானைகள் கூட்டத்தில் சேர்க்கும் வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.