புதுச்சேரி அரசுப் பள்ளிகள் அனைத்தும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இனி சிபிஎஸ்இ முறையில் பாடங்களைக் கற்பிக்க உள்ளன. 


புதுச்சேரிக்கு என தனியாகக் கல்வி வாரியம் கிடையாது. இதனால் தமிழகத்தை ஒட்டியுள்ள புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழகப் பாடத் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மாநிலம் முழுவதும் ஒரே கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 


இதையடுத்து 2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு, புதுச்சேரி முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. பின்னர் 2014- 15ஆம் கல்வி ஆண்டில் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 


அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக ஒவ்வொரு வகுப்புக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் 2018-19ஆம் கல்வி ஆண்டில் 5ஆம் வகுப்புக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும் அதற்குப் பிறகு பிற வகுப்புகளுக்கு பாடத் திட்டம் கொண்டு வரப்படவில்லை. 


6ஆம் வகுப்பில் இருந்து மாணவர்கள் தமிழகப் பாடத் திட்டத்திலும், ஆந்திர, கேரள பாடத் திட்டங்களிலும் படித்து வந்தனர். இதையடுத்து பிளஸ் 2 வரை, ஒரே பாடத்திட்டமாக சிபிஎஸ்இ-ஐ அமல்படுத்த தற்போதைய அரசு முடிவு செய்தது. ’புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும், மாணவர்களுக்கு ரூ.1-க்கு சிறப்புப் பேருந்து இனி இலவசமாக இயக்கப்படும்’ என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.




6-ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அனுமதி கேட்டு, மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு புதுவை கல்வித்துறை விண்ணப்பித்தது. அங்கிருந்து அனுமதி கிடைத்துள்ள நிலையில், 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்பட உள்ளது. இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, அனைத்து அரசு நடுநிலை, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். 


அதில், அரசு நடுநிலை, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஆவணங்களை டிசம்பர் 21ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையுடன் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. 


மத்திய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், புதுச்சேரில் மத்திய அரசின் பாடத்திட்டம் அரசுப் பள்ளிகளில் கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.