புதுச்சேரி: புதுச்சேரியில் சிறப்பு முகாம் மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

சான்றிதழ் வழங்குவதற்கான செயல் திட்டம் 


மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில், இந்த கல்வியாண்டில், பத்து மற்றும் பன்னிரண்டாம்  வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான செயல் திட்டத்தை உருவாக்கிட, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோமசேகர் அப்பாராவ் கோட்டாரு, சார்- ஆட்சியர் தெற்கு, அர்ஜுன் ராமகிருஷ்ணன், துணை ஆட்சியர் வடக்கு, புதுச்சேரி, தாலுக்கா வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர். 

 

சிறப்பு முகாம்


இக்கூட்டத்தில் மே மற்றும் ஜூன் மாதங்களில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேற்படிப்புக்காக குடியிருப்பு மற்றும் சாதி சான்றிதழ் பெறுவதற்காக, தாலுக்கா அலுவலகங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்கவும், உரிய நேரத்தில் சிரமமின்றி சான்றிதழ் வழங்கவும், ஃபிர்கா அளவில் சிறப்பு முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

 

இந்த சிறப்பு முகாம்கள், அடுத்த வாரம் முதல், பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்படும். இதில், தனியார் பள்ளி மாணவர்கள் உட்பட சுற்று வட்டாரப் பகுதிகளைச்  சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம்.  இந்த சிறப்பு முகாம்கள் குறித்த அட்டவணையை சம்பந்தப்பட்ட துணை ஆட்சியர்கள் விரைவில் அறிவிப்பார்கள். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய அருகில் உள்ள இடங்களில் குடியிருப்பு மற்றும் சாதி சான்றிதழ்களைப் பெறுவதற்கான இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.