வருகின்ற ஜூன் மாதம் முதல் டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடக்கவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தையும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துகின்றன. டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளில் பாகிஸ்தான் உள்பட ஒரு சில அணிகளை தவிர, மற்ற அணிகள் அனைத்தும் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்துவிட்டனர்.
இந்தநிலையில், சமீபத்தில் டி20 உலகக் கோப்பைக்கான அமெரிக்க அணி அறிவிக்கப்பட்டது. அதில், அதிகளவில் இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர் என்றால் உங்களால் நம்பமுடியுமா..?
குஜராத்தில் பிறந்த மோனாங்க் படேல் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அமெரிக்கா அறிவித்தது. இதில், முன்னாள் டெல்லி பேட்ஸ்மேனும், 2018-19 ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் குவித்தவருமான மிலிந்த் குமார் இடம்பிடித்துள்ளார். கடந்த 2018-19 ரஞ்சி டிராபி சீசனில் 1331 ரன்கள் எடுத்த கை பேட்ஸ்மேன் மிலிந்த், இதற்கு முன் டெல்லி அணிக்காக ஏழு சீசன்களில் விளையாடி பின்னர் வாய்ப்புக்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.
இந்த அணிக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதற்காக டெல்லியில் இருந்து முன்னாள் ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர்ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கான அமெரிக்க அணியில் மிலிந்த் குமார் இடம்பிடித்துள்ளார்.
டெல்லியில் பிறந்த 33 வயதான கிரிக்கெட் வீரரான மிலிந்த், அமெரிக்காவிற்கு குடிபெயர்வதற்கு முன்பு இந்திய உள்நாட்டுப் போட்டிகளில், சிக்கிம் மற்றும் திரிபுரா அணிகளுக்காக விளையாடினார். மேலும், இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்மீத் சிங்:
இந்த அணியில் 31 வயதான மும்பையின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹர்மீத் சிங்கும் இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த 2012 அண்டர் 19 உலகக் கோப்பையின்போது இந்திய அணிக்காகவும், 2023ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் திரிபுரா மாநில கிரிக்கெட் அணியிலும் விளையாடியுள்ளார். அமெரிக்க மைனர் லீக் கிரிக்கெட்டில் சியாட்டில் தண்டர்போல்ட்ஸ் அணிக்காக விளையாடி, கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்க கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
மற்றொரு மும்பை வீரர்:
மும்பையில் பிறந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சௌரப் நேத்ரவல்கர், 2010 அண்டர் 19 உலகக் கோப்பையில் விளையாடினார். இவர் விளையாடிய அதே அண்டர் 19 உலகக் கோப்பை அணியில் கே.எல்.ராகுல், ஜெய்தேவ் உனத்கட் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
மேலும், டி20 உலகக் கோப்பைக்கான அமெரிக்க அணியில் 2012 U-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த உன்முக்த் சந்த் (கேப்டன்) மற்றும் ஸ்மித் படேல் (விக்கெட் கீப்பர்) ஆகியோர் இடம் பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், வாய்ப்பு வழங்கடப்படவில்லை.
தொடர்ந்து, அமெரிக்க அணியில் நன்கு அறியப்பட்ட முகமான நியூசிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன் இடம் பெற்றுள்ளார். இவர் கடந்த 2015 ஒருநாள் உலகக் கோப்பையிலும், 2014 மற்றும் 2016ல் டி20 உலகக் கோப்பைகளிலும் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்ற கோரி ஆண்டர்சன், கடந்த மாதம் கனடாவுக்கு எதிரான டி20 தொடரில் அமெரிக்கா அணிக்காக அறிமுகமானார்.
அதேபோல், பாகிஸ்தானில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் அலி கானும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
டி20 உலகக் கோப்பை குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்துடன் இடம்பிடித்துள்ள அமெரிக்கா, தனது அண்டை நாடான கனடாவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான அமெரிக்க அணி: மோனாங்க் படேல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஆரோன் ஜோன்ஸ் (துணை கேப்டன்), ஆண்ட்ரீஸ் கௌஸ், கோரி ஆண்டர்சன், அலி கான், ஹர்மீத் சிங், ஜெஸ்ஸி சிங் , மிலிந்த் குமார், நிசார்க் பட்டேல், நிதிஷ் குமார் , நோஷ்துஷ் கென்ஜிகே, சவுரப் நேத்ரவல்கர் , ஷாட்லி வான் ஷால்க்விக், ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஷயான் ஜஹாங்கீர் .