புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவதை அடுத்து,  9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் பிரியதர்ஷினி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு என தனியாகக் கல்வி வாரியம் கிடையாது. இதனால் தமிழகத்தை ஒட்டியுள்ள புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழகப் பாடத் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மாநிலம் முழுவதும் ஒரே கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதையடுத்து 2011ஆம் ஆண்டில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு, புதுச்சேரி முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. பின்னர் 2014- 15ஆம் கல்வி ஆண்டில் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 

Continues below advertisement

அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக ஒவ்வொரு வகுப்புக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் 2018- 19ஆம் கல்வி ஆண்டில் 5ஆம் வகுப்புக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும் அதற்குப் பிறகு பிற வகுப்புகளுக்கு பாடத் திட்டம் கொண்டு வரப்படவில்லை. 

6ஆம் வகுப்பில் இருந்து மாணவர்கள் தமிழகப் பாடத் திட்டத்திலும், ஆந்திர மற்றும் கேரள பாடத் திட்டங்களிலும் படித்து வந்தனர். இதையடுத்து பிளஸ் 2 வரை, ஒரே பாடத்திட்டமாக சிபிஎஸ்இ-ஐ அமல்படுத்த கடந்த 2022ஆம் ஆண்டு அரசு முடிவு செய்தது. இது குறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் 2023- 24ஆம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாக உள்ளது. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் 9ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் பிரியதர்ஷினி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், புதுச்சேரியில் மத்திய அரசின் பாடத்திட்டம் அரசுப் பள்ளிகளில் கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதையும் வாசிக்கலாம்: School Reopening: 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு