ஒவ்வொரு ஆண்டும் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தும் வகையில்  மே 28ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.  குழந்தை பருவத்திலிருந்தே மாதவிடாய் பற்றி நன்கு புரிந்துகொள்வது பாதுகாப்பான பழக்கங்களை வளர்க்க உதவும். இது தொற்று மற்றும் பிற நோய்களை மேலும் தடுக்கலாம். சரியான மாதவிடாய் சுகாதாரப் பொருளைப் பயன்படுத்துதல், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சருமப் பிரச்சனைகளைக் கையாள்வது, நாப்கின்ஸ் அல்லது டம்பான்ஸ்களை சரியான முறையில் அப்புறப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு முக்கியமானது.


சரியான உபகரணத்தைத் தேர்வு செய்யவும்


பொருத்தமான மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைத் தேர்வு செய்யத் தவறினால் எரிச்சல், தோல் சிவத்தல், அல்லது சொறி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். ஆகையால் உங்களுக்கு எந்த வகையான சானிட்டரி நாப்கின், டம்பான்கள், மாதவிடாய் கோப்பைகள் பொருத்தமானது என்பதை அறிந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி பயன்படுத்தவும்.


அதிக சென்ட் வாசனை கொண்ட பேட்களை தவிர்க்கவும். மாதவிடாய் காலத்தில் பிறப்புறப்பு பகுதியில் வாசனை திரவியம் தெளிக்கவே கூடாது. இது பல உபாதைகளுக்கு வழி வகுக்கும். அதேபோல் உள்ளாடையை நன்றாக துவைத்து வெயில்படும் இடத்தில் காயவைத்து பயன்படுத்துவது மிக முக்கியமானது. 


எவ்வளவு நேரம்?


மாதவிடாய் காலத்தில் சரியான நாப்கின்ஸ்களை அணிவதை விட எவ்வளவு நேரம் அதனை உபயோகிக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். அதன்படி, நாப்கின்ஸ்கள் குறைந்தது 6 முதல் 8  மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதேபோன்று, மாதவிடாய் கோப்பை பயன்படுத்தினால், அதனை 8 மணி நேரத்திற்கு பிறகு அந்த கோப்பையை வெண்ணீரில் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். மேலும் டம்பான்ஸ்களை குறைந்தது 9 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். 


மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்கள், கோப்பைகள், டம்பான்ஸ்களை அதற்கேற்ற நேரத்தில் அடிக்கடி மாற்றுவது நோய்க்கிருமிகள் உண்டாவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.


சுத்தம் செய்வதில் கவனம் தேவை


ஆண்களைவிட பெண்களுக்கு பிறப்புறுப்பு தொற்றுக்கான வாய்ப்பு அதிகம். காரணம் பெண்களுக்கு ஆசன வாயும், யோனி வாயும் அருகருகே இருக்கிறது. இதனால் யோனியிலிருந்து ஆசனவாய் வரை கழுவ வேண்டும். எதிர்மறையாகக் கழுவுவதால் கிருமிகள் இன்னும் பிறப்புறுப்புக்குள் உள்ளே தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம்.


உங்கள் பிறப்புறுப்பை இவ்வாறாகக் கழுவுவதே சுத்தத்தை உறுதி செய்ய வேண்டும். சானிட்டரி நாப்கினை அகற்றிய பிறகு பாக்டீரியா உங்கள் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதனால் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துங்கள். அதேபோன்று, யோனியை சுத்தம் செய்ய கடினமாக ரசாயனங்களை பயன்படுத்தக் கூடாது. ஜெண்டில் சோப் எனப்படும் மிதமான சுத்திகரிப்புப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கழுவுவது குளிப்பது மாதவிடாய் நேரத்தில் உகந்தது.


சுத்தமாக இருக்க வேண்டும்


மாதவிடாய் காலத்தில் சுகாதாரமாக இருப்பதும் உடலை பராமரிப்பது இன்றியமையாதது. மாதவிடாய் காலத்தில் தவறாமல் குளிப்பதும், அடிக்கடி கைகளை கழுவவும் வேண்டும். மேலும், உள்ளாடைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை மாற்றுவது நல்லது. அதேபோன்று ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். 


அதேபோன்று, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகளைத் தவிர்க்க மாதவிடாய் காலத்தில் அதிக எண்ணெய், காரசாரம், புளிப்பு என சுவைமிகு உணவுகளைத் தவிர்க்கலாம். எளிதில் ஜீரணமாகும் உணவுகளையும் பழங்களையும் கீரைகளையும் உலர் பழங்களையும் உட்கொள்ளலாம்.