ஆந்திர பிரதேசத்தில் நடந்த இரண்டு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் பலத்த காயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி மற்றும் கிருஷ்ணா மாவட்டம் என இருவேறு இடங்களில் இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளது.
4 பேர் உயிரிழப்பு:
நெல்லூர் இந்துகூர்பேட்டையை சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு காணிப்பாக்கம் சென்றபோது விபத்துக்குள்ளானது.
திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம் எம் கொங்கரவாரிபாலம் என்ற இடத்தில் கார் கல்வெட்டில் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த 2 பேர் பலத்த காயம், கவலைக்கிடமான நிலையில் ஒருவர் திருப்பதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தின் போது காரில் மூன்று உடல்கள் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் கடுமையாகப் போராடி அவர்களின் உடல்களை மீட்டனர். சாலையை சரிவர பார்க்காமல் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என போலீசார் நடந்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த அனைவரும் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மற்றொரு விபத்து:
கிருஷ்ணா மாவட்டம் பாபுலபாடு மண்டலம் கொடுருபாடு ஹெச்பி பெட்ரோல் பங்க் அருகே பயங்கர சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். தகவலின் பேரில் அனுமன் சந்திப்பு சிஐ அல்லு லட்சுமி நரசிம்மமூர்த்தி, வீரவள்ளி எஸ்ஐ சிரஞ்சீவி மற்றும் அவர்களது போலீசார் குழு சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொவ்வூரில் இருந்து தமிழகத்திற்கு காரில் சென்றபோது இந்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்தவர்கள் விவரம்: சுவாமிநாதன் (40), ராகேஷ் (12), ராதாபிரியா (14), கோபி (23) சம்பவ இடத்திலேயே இறந்தனர். சத்யா (28) (சுவாமிநாதனின் மனைவி) பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஆந்திரா அடுத்த காக்கிநாடாவிலும் கார் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் ஒரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் விஜயநகரத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும், விபத்து குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை.