பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்கள் (PSTM சான்றிதழ்) இனி ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும் என்று  பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார். 


டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளிலும் அரசுப் பணிகளுக்கும்  தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் வழியில் படித்தோர், தாங்கள் படித்த பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வரிடம் விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. பிறகு சில மாதங்களுக்கு முன்னதாக ஆன்லைன் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு நடைமுறைகள் மூலமாகவும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


இதைத் தொடர்ந்து தற்போது பள்ளிகளில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்கள் இனி ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார். இதன்படி சேவை மையம் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே தேர்வர்கள் இனி விண்ணப்பிக்க முடியும். 


இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவர் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: 


’’சேவை மையத்தில் விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் பள்ளிக் கல்வி மாநிலத்திட்ட இயக்ககத்தில் இருந்து மின்னஞ்சல் மூலமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து ஆன்லைன் மூலமாகவே தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படும். தலைமை ஆசிரியர்கள் பள்ளிப் பதிவேடுகளைப் பார்த்து, விண்ணப்பத்தின் நம்பகத் தன்மையை சரிபார்த்த பின்னர் மின் கையொப்பம் செய்து பதிவேற்றம் செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.




தமிழ் வழி சான்றிதழை ஆன்லைன் வாயிலாகவே மட்டுமே வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தலைமை ஆசிரியர் கையினால் பூர்த்தி செய்து சான்றிதழை வழங்கக் கூடாது. ஒரு வேளை விண்ணப்பதாரரின் விவரங்கள் தவறாக இருந்தால் அதனை ஆன்லைன் வாயிலாகவே தலைமை ஆசிரியர் நிராகரித்து விடலாம்.


PSTM எனப்படும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்கள் வழங்குவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்’’. 


இவ்வாறு  பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


விண்ணப்பங்களின் நிலையைச் சரிபார்க்க https://emis.tnschools.gov.in/ auth/login?returnUrl=%2 Fdashboard என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்.


கூடுதல் விவரங்களுக்கு: enquire.tnemis@gmail.com


இதையும் வாசிக்கலாம்:   MBBS in Tamil: இனி தமிழில் எம்பிபிஎஸ் படிக்கலாம்: பாடங்களைத் தமிழுக்கு மொழிமாற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்