சனி நீராடு, கூழானாலும் குளித்துக் குடி என்று நம் மூத்தோர் கூறியுள்ளனர். அன்றாடம் குளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். புறத் தூய்மை ஒரு மனிதனுக்கு மிக மிக அவசியம்.
இதில் என்ன இருக்கிறது நாங்கள் தான் அன்றாடம் குளிக்கிறோமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம் எல்லோரும் தான் குளிக்கிறோம். சிலர் இரண்டு வேலை கூட குளிக்கிறோம். ஆனால் எப்படிக் குளிக்கிறோம் என்பது தான் முக்கியம். நாம் குளிக்கும் போது உடல் முழுவதும் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். நம் பிறப்புறுப்புகள், அக்குல், ஆசன வாய், முதுகு முழங்கால், பின்னங்கால், காது மடலின் பின்புறம் என அனைத்தையும் சுத்தமாக சோப்பு கொண்டு கழுவி குளிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நம் தொப்புள் சுத்தம் பற்றி பெரியவர்களுக்கே பெரும்பாலும் தெரியவில்லை. தொப்புளை சுத்தம் செய்யாவிட்டால் அதில் பாக்டீரியாக்கள், அழுக்கு, எண்ணெய் சேர்ந்து பலவிதமான தொந்தரவும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வாருங்கள் தொப்புள்ளை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்று காண்போம்.
சோப், ஷவர் ஜெல் அல்லது மிதமான ஷாம்பூ:
உங்கள் தொப்புளை சுத்தப்படுத்த மிகவும் எளிய முறைகளில் ஒன்று சோப், ஷவர் ஜெல் அல்லது மிதமான ஷாம்பூ கொண்டு அதனை சுத்தப்படுத்துவது. குளித்த பின்னர் ஒரு மென்மையான துண்டு கொண்டு நன்றாக ஒத்தி எடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் தொப்புளுக்குள் தண்ணீர், சோப்பு ஏதும் மிச்சமிருந்தால் அது நீங்கிவிடும். தொப்புள் ஈரமில்லாமல் வறண்டுவிடும்.
உப்பு கொண்டு சுத்தம் செய்யலாம்:
தொப்புளில் அதிக அழுக்கு இருப்பதாக உணர்ந்தால் உப்பு கொண்டு சுத்தம் செய்யலாம். தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும். அதில் ஒரு சுத்தமான துணியை முக்கி பிழிந்து எடுக்கவும். பின்னர் அந்த துணியைக் கொண்டு தொப்புளின் உள் பகுதியை மென்மையாக சுத்தம் செய்யவும்.
தொப்புள் அணிகலன் அணிந்துள்ளீர்களா?
சிலர் தொப்புளில் அணிகலன் அணிகின்றனர். அவ்வாறு அணிந்திருப்பவர்கள் எப்படி தொப்புளை சுத்தம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். தொப்புளில் முதன்முதலில் அணிகலன் அணிந்தவுடன் சிறிய அளவில் புண் ஏற்படும். அந்தப் புண் குணமானவுடன் முதலில் அந்த அணிகலனை அகற்றுங்கள். பின்னர் முன்னர் கூறியது போல் உப்பு தண்ணீரில் ஒரு துணியை முக்கி எடுக்கவும். அதை நன்றாகப் பிழிந்துவிட்டு நன்றாக தொப்புளை சுத்தப்படுத்தவும். பின்னர் அணிகலனை மாட்டிக் கொள்ளலாம். அவ்வப்போது இவ்வாறாக தொப்புளை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
முக்கியமாக தொப்புளில் க்ரீம், லோஷன், மாய்ஸ்சரைஸர் என எதையும் தேய்க்கக் கூடாது. இது தொப்புளில் பாக்டீரியா உருவாக வழிவகுக்கும். இது தவிர சந்தையில் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில தொப்புள் பேணும் மருந்துகள் அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் இவ்வாறான சந்தை பொருட்களை பயன்படுத்தும் முன்னர் முறையான மருத்துவ ஆலோசனை பெற்றே பயன்படுத்த வேண்டும் என்பது தவறாமல் கவனத்தில் கொள்ள வேண்டியது.