தமிழ்நாட்டில் உள்ள 50% பொறியியல் கல்லூரிகளில் முழு நேரப் பேராசிரியர்கள் நியமனத்தில் மோசடி நடைபெற்று இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஒரே நேரத்தில் 11 பொறியியல் கல்லூரிகள் வரை ஒரே பேராசிரியர் பணிபுரியும் அதிர்ச்சித் தகவலும், 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் வேலை செய்யும் அவல விவரமும் ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் ஏஐசிடிஇ (AICTE ) அங்கீகாரம் வழங்கி வருகிறது. இதற்காகக் குழு நியமிக்கப்பட்டு, கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று அண்ணா பல்கலை.யே தணிக்கையில் ஈடுபடுகிறது.
ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணி
இந்த நிலையில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றுவதாகவும், மோசடியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் மீது தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“கடந்த 2023-24 ஆம் கல்வி ஆண்டு,அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மையம் (Centre for Affiliation of Institutions - CAI) தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து மோசடி செய்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்கள் இடங்களை நிரப்புவதில் மோசடி நடைபெற்றுள்ளது.
ஒரே பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் வேலை செய்வதாகக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் 2 முதல் 11 கல்லூரிகள் வரை பணியாற்றி வருகின்றனர். இதில் 175 பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களாக உள்ளனர். ஒரு பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றும் அவலம் 224 கல்லூரிகளில் நடைபெற்றுள்ளது. இவை தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பொறியியல் கல்லூரிகளிலும் சுமார் 50 சதவீதமாகும்.
அண்ணா பல்கலைக்கழகமே அனுமதி வழங்கியது அம்பலம்
முழு நேரப் பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் ஒரு கல்லூரிக்கு மேல் பணியாற்றக் கூடாது என விதிமுறை இருந்தும் அதனைப் பின்பற்றாமல், ஒருவரே பல கல்லூரிகளில் பணியாற்றுவதற்கு அண்ணா பல்கலைக்கழகமே அனுமதி வழங்கி உள்ளது அம்பலமாகியுள்ளது.
ஒவ்வொரு பேராசிரியருக்கும் ஏஐசிடிஇ இணையதளத்தில் யூனிக் ஐடி என்பது உள்ளீடு செய்யப்படும். ஆனால் இது போன்ற உள்ளீடு ஐடி இல்லாமல் போலியான ஐடிகளை உருவாக்கி தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 13891 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு பணியாற்றக்கூடிய பேராசிரியர்கள் தகுதியான பேராசிரியர்களா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே இது தொடர்பான விசாரணை மேற்கொள்ள வேண்டும்
தமிழகத்தில் உள்ள 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் வேலை பார்ப்பதாக மோசடிகள் நடைபெற்றுள்ளன. எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் கல்லூரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர், ஆளுநரிடம் புகார்
இது தொடர்பான ஆவணங்களை முதலமைச்சர் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் உயர் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோருக்கு புகார் அளித்திருக்கிறோம்.
தமிழக அரசு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் இந்த விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்''.
இவ்வாறு அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தளத்திலேயே ஆதாரம்
சென்னை மண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை https://www.annauniv.edu/cai/District%20wise/district/Chennai.php என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். இதிலும் https://www.annauniv.edu/cai/Options.php இணைப்பைக் க்ளிக் செய்து பிற மண்டலங்களிலும் ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வருவதை அறிய முடியும்.
https://www.annauniv.edu/cai/index.php என்ற இணைப்பில், Affiliated Colleges என்ற இணைப்பை க்ளிக் செய்து, இவற்றைக் காணலாம்.