நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரையில் 19 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் 2024 -25 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அவரின் உரை மூலம் இந்தியாவின் பல்வேறு துறை மற்றும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து விவரித்தார்.
விவரிக்கப்பட்ட அந்த நிதி அறிக்கையில் கல்விக்கான புதிய திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்க வரி குறைப்பு, வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு, வருமான வரி என பல்வேறு துறைகளின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்திய எங்கும் பல்வேறு தலைவர்கள் அவரவர்களின் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டில் தமிழகத்துக்கு எந்த ஒரு நலத்திட்டமும் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில் இல்லையே என கேள்வி எழுப்பி இருந்தார்.
தற்போது கவிஞர் வைரமுத்து நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து தன்னுடைய விமர்சனத்தை திருக்குறளை முன்வைத்து தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின்
நிதிநிலை அறிக்கையில்
உரிமையும் நியாயமும்
தேவையும் உள்ள தமிழ்நாடு
போகிற போக்கில்
புறக்கணிக்கப்பட்டிருக்கிறது
இது
அறிந்தே செய்யும் அநீதி
தனக்கு எதிராகக்குடை
பிடித்தவனுக்கும்
சேர்த்தே பொழிவதுதான்
மழையின் மாண்பு
மழைமாண்பு
தவறிவிட்டது
நிதிநிலை அறிக்கையில்
குறள் ஒன்று கூறுவது
எழுதாத மரபு.
இவ்வாண்டு விடுபட்டுள்ளது
எழுத வேண்டிய குறள்
என்ன தெரியுமா?
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”