தமிழகத்தில் பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்திய 76 அரசுப் பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட உள்ளது.
கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
என்னென்ன அளவுகோல்?
* அரசுப் பொதுத் தேர்வுகள்/ திறனறித் தேர்வுகளில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு,
* அன்றாட கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகள்,
* வகுப்பறை கற்பித்தலில் தொழில்நுட்பப் பயன்பாடு,
* கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள்,
* மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்,
* உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை,
* விளையாட்டுப் போட்டிகள்,
* கலைத் திருவிழா,
* மன்ற செயல்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு ஆகியவவற்றை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
அதேபோல பள்ளி வகுப்பறைகள், மாணவர்களின் கற்றலுக்கு ஏற்ற வகையில் இருக்கை வசதி மற்றும் தேவையான மின் மற்றும் மின்னனணு சாதனங்களுடன் கூடிய ஆய்வகங்கள்,
* வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள்,
* விளையாட்டு மைதானம் மற்றும் அவற்றின் பயன்பாடு,
* போதுமான எண்ணிக்கையிலான கழிப்பறைகள் மற்றும் அவற்றின் முறையான பராமரிப்பு,
* பள்ளி வளாக தூய்மை,
* மாணவர்கள் உணவருந்த சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை,
* பள்ளியின் பசுமைச் சூழல்,
* பள்ளி காய்கறித் தோட்டம் மற்றும் அதன் பயன்பாடு,
* நூலக பயன்பாடு,
* ஆய்வக பயன்பாடு ஆகியவற்றையும் மதிப்பிட்டு விருதுக்குரிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
குழு பரிந்துரை
அதன்படி, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கு முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட அளவிலும், பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் மாநில அளவிலும் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவானது மாவட்டத்துக்கு தகுதியான 4 பள்ளிகளைத் தேர்வு செய்து பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரைத்தது. அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியல் இதில் இருந்தது.
அதில் சிறந்த பள்ளிகளாக ஒரு மாவட்டத்துக்கு 2 பள்ளிகள் வீதம் மொத்தமாக 76 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளுக்கு விரைவில் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட உள்ளது.