கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் இளநிலைத் தேர்வில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி கலப்பு முறையில் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல 6 விருப்பப் பாடங்களை மட்டுமே இனி தேர்வு செய்ய முடியும்.


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.


ஆண்டுதோறும் தேர்வு


2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில்  இந்தத் தேர்வு, ஆண்டுதோறும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. 


இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2024ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் மார்ச் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மே 15 முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜூன் 30ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கலப்பு முறை (Hybrid mode)


இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான க்யூட் இளநிலைத் தேர்வு கலப்பு முறையில் நடைபெற உள்ளது. கணினி முறையில் மட்டுமே இதுவரை நடைபெற்று வந்த க்யூட் தேர்வு, இந்த முறை பேனா – காகித முறையிலும் நடைபெற உள்ளது.


இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் கூறும்போது, அதிக அளவில் விண்ணப்பங்கள் குவியும் பாடங்களுக்கு பேனா – காகித முறையில் ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடத்தப்பட உள்ளது. பிற பாடங்களுக்கு கணினி முறையே தொடரப்பட உள்ளது.


6 பாடங்கள் விருப்பப் பாடங்கள் (Options for six subjects)


கடந்த ஆண்டுகளில் அதிகபட்சம் 10 பாடங்கள் வரை விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்ய மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த முறை அதிகபட்சம் 6 பாடங்கள் வரை தேர்வு செய்ய மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


13 மொழிகளில் தேர்வு


க்யூட் இளநிலைத் தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. தேர்வு வெளிநாடுகளில் 26 நகரங்கள் உள்பட 389 நகரங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


க்யூட் தேர்வு குறித்த முழுமையான அறிவிக்கையைக் காண: https://exams.nta.ac.in/CUET-UG/images/public-notice-for-cuet-ug-2024.pdf என்ற இணைப்பைக் காணலாம். 


கூடுதல் தகவல்களுக்கு: https://cuet.nta.nic.in/