மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என எந்த தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.


சென்னை அடையாரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ரோட்டரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 55 ஆசிரியர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்  வழங்கினோம் என்று கூறினார்.


ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்விக்கு,  பள்ளிக்கல்வி துறையின் அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்து உள்ளோம். ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மருத்துவ வல்லுநர் குழுவினருடன் ஆலோசனை நடத்தும் போது, இது தொடர்பாக ஆலோசனை செய்து உரிய முடிவை முதலமைச்சரே அறிவிப்பார் என்று பதிலளித்தார்.




மாணவர்களுக்கு சத்துணவு இலவசமாக வழங்கப்படுவது போல மாஸ்க் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, பள்ளிக்கு மாணவர்கள் மாஸ்க் அணியாமல் வந்தால் அவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் மூலமாக வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிதி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள் சுமார் மூன்று லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் அவர்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருவதாக பள்ளி கல்வித்துறைக்கு தொடர்ந்து தகவல் வருகிறது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் அவர்களின் ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என எந்த தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக்கூடாது” என்று கூறினார்.


தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டியில், அரசுப்பள்ளிகளில் பொதுவாக தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் அதிக ஆசிரியர்களும், வட மாவட்ட பள்ளிகளில் குறைவான ஆசிரியர்களும் உள்ளனர். எனவே வட மாவட்டங்களில் பணியாற்ற தென்மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே பணி நிரவல் கலந்தாய்வின் போது இவற்றை சரி செய்யக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்தார்.


சில இடங்களில் பள்ளிக்கு வர மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. 


Tamil Nadu School Reopening: ரிஸ்க்... ரிஸ்க்... ரிஸ்க்.. திறந்த பள்ளிகளுக்கே விடை தெரியாத போது... 6 முதல் 8 வரை திறப்பது சரியா?