நீதிமன்றத்தில் திருவள்ளுவர், காந்தி படங்களைத் தவிர மற்ற தலைவர்களின் படங்கள் இருக்ககூடாது அவற்றை அகற்ற வேண்டும் என ஜூலை 7ஆம் தேதி நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியது. இது வழக்கறிஞர்களுக்கு மட்டும் இல்லாது அரசியல் தளத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, இந்த அறிக்கை சட்டத்தை எழுதிய அம்பேத்கரின் படத்தை நீதிமன்ற வளாகத்தில் இருந்து நீக்க உத்தரவிடுகிறது என மூத்த வழக்கறிஞர்கள் தொடங்கி மூத்த அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தனர். இந்த சுற்றறிக்கையின் காரணமாக ஆலந்தூர் நீதிமன்ற வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருச்சிலை அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள உயர் நீதிமன்ற சமத்துவ வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற சுற்றறிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து ஏற்கனவே நேற்று விசிக தலைவர் திருமாவளவன், “ உயர்நிதிமன்ற பதிவாளர் அண்மையில் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை தருகிறது. இது திட்டமிட்டு புரட்சியாளர் அம்பேத்கரின் படங்களையும், சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையாக இருக்கிறது. இந்த சுற்றறிக்கையை உயர்நீதிமன்றம் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்திருந்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், புதிய ஆணையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் திரும்பப் பெறுமாறும், திருவள்ளுவர், காந்தியார் ஆகிய படங்கள் வரிசையில் அம்பேத்கரி உருவப் படமும் இடம்பெற அனுமதிக்குமாறும் உயர்நீதிமன்ற பதிவாளரை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற அலுவல்களைப் புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தினர். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.