கடலை ஆள்பவரே உலகையும் ஆள்கிறார் என்று கடல்சார் மத்தியக் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 


இந்திய கடல்சார் மத்தியக் பல்கலைக்கழகம் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இயங்கி வருகிறது. இதன் 8வது பட்டமளிப்பு விழா இன்று (அக்டோபர் 27) நடைபெற்று வருகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டுள்ளார். அவர் 245 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கிறார். 


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாகூர், மாநில அமைச்சர் பொன்முடி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். 


நேற்று இரவு சென்னை வந்த குடியரசுத் தலைவர்


இதற்காக திரௌபதி முர்மு இன்று மாலை 6 மணி அளவில் பெங்களூருவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு 6.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். 


அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், பொன்முடி, எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தனர். மேலும், டிஜிபி சங்கர் ஜிவால், மேயர் பிரியா உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் சாலை மார்க்கமாக கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று இரவு தங்கினார். தொடர்ந்து இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சர் பொன்முடி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசினார்.  பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்று 8வது பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்தார். 


இணை வேந்தர் மாலினி விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில்,  குடியரசுத் தலைவர் முர்மு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். விழாவில் சிறப்பாகப் பங்காற்றிய மாணவர்களுக்கு 10 தங்கம் மற்றும் 10 வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன. இவை தவிர்த்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் 6 வளாகங்களைச் சேர்ந்த 1,944 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 245 மாணவர்களுக்கு நேரடியாகப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் இரண்டு பிஎச்.டி. மற்றும் ஒரு எம்.எஸ். மாணவர் ஆகியோருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. 


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, ''அலைகளை ஆள்பவரே உலகை ஆள்கிறார் என்றொரு மேற்கோள் இருக்கிறது. அந்த வகையில், கடலை யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறாரோ அவரே ஒட்டுமொத்த உலகையும் கைக்குள் வைத்திருக்கிறார். இந்தியா தனது கடல்சார் இருப்பை முழுமையாக நிலைநிறுத்த, நிறைய சவால்களில் இருந்து மீண்டு வரவேண்டும்.


காலநிலை மாற்றம்


நமது காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக காலநிலை மாற்றம் உள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை இதில் அடங்கும். கடல்சார் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில்முறை பொறுப்பு மட்டுமல்ல, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் கடமையும் உள்ளது. கடலில் பசுமை சார்ந்த நடைமுறைகள் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு அவசியம்.


மத்தியப் பல்கலைக் கழகங்களிலேயே அண்மையில் தொடங்கப்பட்ட இளம் பல்கலைக்கழகமாக இருந்தாலும், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் தனது திறமையை நிரூபித்துள்ளது. கடல்சார் கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான உலகப் புகழ்பெற்ற மையமாக இது பிரகாசிக்கும் திறனைக் கொண்டுள்ளது.’’


இவ்வாறு குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்தார்.