பிரஹதி, சாக்‌ஷம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி உதவித்தொகையைப் பெற டிசம்பர் 15 கடைசித் தேதி ஆகும்.


ஏஐசிடிஇ சார்பில் பிரகதி என்ற பெயரில் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 800 மாணவிகளுக்கு பிரகதி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.


டிசம்பர் 15 கடைசி!


இந்த நிலையில் 2024- 25ஆம் ஆண்டு பிரகதி கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (டிசம்பர் 15) கடைசித் தேதி என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. 


இந்த கல்வி உதவித்தொகைக்கு பொறியியல் முதல் ஆண்டு மாணவிகளும், டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.


பிரகதி கல்வி உதவித்தொகை குறித்த விரிவான விவரங்களை அறிய: https://scholarships.gov.in/public/schemeGuidelines/AICTE/AICTE_2010_G.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


சாக்‌ஷம் உதவித்தொகை


அதேபோல சாக்‌ஷம் உதவித்தொகைக்கும் விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளன. சாக்‌ஷம் என்பது உயர் கல்வித்துறை சார்பில் ஏஐசிடிஇ அளிக்கும் கல்வி உதவித்தொகை ஆகும். தொழில்நுட்பக் கல்வி படிக்கும் சிறப்புத் திறன் கொண்ட மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மாற்றுத் திறனாளி மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி ஒவ்வோர் ஆண்டும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படுகிறது.


இந்தத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற, டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு முதல் ஆண்டு அல்லது  இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் படிக்க வேண்டியது முக்கியம்.


என்ன தகுதி?


அதேபோல உடலில் 40 சதவீதத்துக்குக் குறைவில்லாமல் மாற்றுத் திறன் கொண்டிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவில்லாமல் இருக்கக் கூடாது. அரசு அளிக்கும் செல்லுபடியான வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.


இந்தத் திட்டம் குறித்து முழு விவரங்களை விரிவாக அறிய: https://scholarships.gov.in/public/schemeGuidelines/AICTE/AICTE_2013_F.pdf


பிற உதவித் தொகைகளும் உண்டு


அதேபோல, ஸ்வநாத், பிஎம் உச்சாதார் சிச்ஷா புரோட்சஹான் உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள், பல்வேறு மத்திய அமைச்சகங்களின்கீழ் வழங்கப்படுகின்றன. அவற்றுக்கும் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கூடுதல் விவரங்களுக்குhttps://scholarships.gov.in/