எந்த ரூபத்திலும் நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் 3ஆவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அவர் கூறும்போது, ''திமுக தேர்தல் அறிக்கையில் மாநிலக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் எனவும் அதற்குக் கல்வியாளர்கள் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அது குறித்துக் கடந்த நிதிநிலை அறிக்கையிலும் சரி, இந்த நிதிநிலை அறிக்கையிலும் சரி அறிவிப்பு இல்லை. எனவே நாம் பின்பற்றப் போவது, தேசியக் கல்விக் கொள்கையா? அல்லது மாநிலக் கல்விக் கொள்கையா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் நுழையாது. நுழையவும் விட மாட்டோம்'' என்று தெரிவித்தார்.
''உயர் கல்வித்துறை அமைச்சரின் உத்தரவாதத்துக்கு நன்றி'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, ''மாநிலக் கல்விக் கொள்கையை நிறைவேற்ற இந்த மாதத்திற்குள் குழு அமைக்கப்பட உள்ளது. புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம். மாநில கல்வி கொள்கைக் குழு உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள்
புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். அதைத் தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்க மாட்டோம். அதேபோல எந்த ரூபத்திலும் நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம். அது எப்படி தமிழ்நாட்டுக்குள் நுழைய முயன்றாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பார்'' என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கொண்டு வரப்படுமென்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இதற்கு பிளஸ் 2 மதிப்பெண் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய யுஜிசி தலைவர் மண்டலா ஜெகதீஷ் குமார், ''மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இளங்கலை நுழைவுத் தேர்வை ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு (one nation, one exam) என்று நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். இந்த நடைமுறை மாணவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்துக் கல்வி வாரியங்களையும் சார்ந்த, குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும் விதமாக அமையும்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியையும் வாசிக்கலாம்: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் - யூ.ஜி.சி
கல்லூரிகளில் திருநருக்கு இலவச இடம்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
*
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்